edappadi palanisamy pt
இந்தியா

“அயோத்தி ராமர் அனைவருக்கும் பொதுவானவர்..” - திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தபின் இபிஎஸ் பேட்டி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், அயோத்தி ராமர் கோவில் விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார்.

யுவபுருஷ்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆந்திரா சென்றார். மாலை நேரத்தில் திருப்பதி சென்றடைந்த அவரை, தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.

Tirupathi

தொடர்ந்து, திருப்பதி மலையில் உள்ள வராக சாமி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டார் இபிஎஸ். இரவு திருப்பதி மலையில் தங்கிய அவர் இன்று காலை கோவிலுக்கு சென்று அஷ்டதள பாத பத்மாராதனை சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார்.

பின்னர், கோவிலில் இருந்து வெளியே வந்த அவர், ஏழுமலையான் கோவில் எதிரிலிருக்கும் அகிலாண்டம் பகுதிக்கு சென்று தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபாடு மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களுடன் பேசிய அவர், “மனநிறைவு ஏற்படும் வகையில் இன்று ஏழுமலையானை வழிபட்டு இருக்கிறேன்” என்றார்.

அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், ”அயோத்தி ராமர் அனைவருக்கும் பொதுவானவர். யார் விரும்பினாலும் அங்கு சென்று வழிபாடு மேற்கொள்ளலாம். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளை தலைமைக்கழகம் அறிவித்த தேர்தல் பணிக்குழு துவக்கி இருக்கிறது” என்று கூறினார்.