புது தில்லியிலிருந்து கணபதி சுப்ரமணியம்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைபேசியை திறந்து, அதில் உள்ள தரவுகளை எடுக்க முடியாமல் அமலாக்கத்துறை திணறுகிறது.
கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை கைது செய்தபோது நான்கு கைபேசிகளை கைப்பற்றியுள்ளது. இதில், முதலமைச்சர் பயன்படுத்தி வந்த ஆப்பிள் ஐபோன் கைபேசியும் அடக்கம்.
கெஜ்ரிவாலின் ஐபோன் தரவுகளை பதிவிறக்கம் செய்ய அமலாக்கத்துறை முயற்சி செய்து வருகிறது. ஆனால், இதுவரை அந்த கைபேசியை திறக்க முடியவில்லை. கெஜ்ரிவால் தனது கைபேசியின் கடவுச்சொல்லை தர மறுத்துவிட்டார் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகவே, அமலாக்கத்துறை பல ஹாக்கிங் தெரிந்த சாஃப்ட்வேர் நிபுணர்கள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தை அணுகி அந்த கைபேசியை திறக்க முயற்சி செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் கேஜ்ரவால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக ஆப்பிள் ஐபோன் ஒன்றை பயன்படுத்தி வருகிறார். இந்தக் கைபேசியின் கடவுச்சொல்லை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தால், அவர்கள் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வியூகங்கள் மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விவரங்களை பதிவிறக்கம் செய்து பாரதிய ஜனதா கட்சிக்கு கொடுத்து விடுவார்கள் என கேஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார்.
தற்போது அமலாக்கத்துறை காவலில் உள்ள கெஜ்ரிவாலிடம் பலமுறை அமலாக்கத்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்தும், அவர் தனது கைபேசியின் கடவுச்சொல்லை அளிக்க மறுத்துவிட்டார். சாதாரண அழைப்பு மூலம் பேசாமல், மதுபான விநியோக முறைகேடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ் டைம் போன்ற செயலிகள் மூலம் பேசியதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டிவருகிறது.
டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா பல கைபேசிகளை அழித்து ஆதாரம் இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுத்தார் என்பதும் அமலாக்கதுறையின் குற்றச்சாட்டு. மணிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் தற்போது இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இதைத் தவிர டெல்லி அமைச்சர் கைலாஷ் கேலோட்டிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை தினசரி பல மணி நேரங்கள் விசாரணை நடத்தி வருகிறது. மணிஷ் சிசோடியாவிடம் செயலாளராக பணியாற்றிய அரவிந்த் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளர் என் டி குப்தா ஆகியோரின் வாக்குமூலம் குறித்து கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் கைபேசி தவிர கெஜ்ரிவால் இல்லத்தில் மேலும் 3 கைபேசிகளை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்துச் சென்றுள்ளது. மேலும் கெஜ்ரிவால் இல்லத்தில் அவரை மதுபான கொள்கை விவகாரத்தில் சம்பந்தப்பட்டோர் சந்தித்தார்களா மற்றும் கோவா மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சந்தித்தார்களா என்பது குறித்தும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.