இந்தியா

ஜாய் ஆலுக்காஸுக்கு சொந்தமான ரூ. 305 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை!

ஜாய் ஆலுக்காஸுக்கு சொந்தமான ரூ. 305 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை!

சங்கீதா

ஹவாலா பணப்பரிமாற்ற மோசடிப் புகாரில் பிரபல நகைக் குழுமமான ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைவர் வர்கீஸின் ரூ.305 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது பிரபல தங்க நகைக் கடையான ஜாய் ஆலுக்காஸ். இந்த நிறுவனத்தின் தலைவராக ஜாய் ஆலுக்காஸ் வர்கீஸ் உள்ளார். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம், அதன் ரூ. 2,300 கோடி ஆரம்ப பொதுப் பங்கு எனப்படும் ஐபிஓவை (initial public offering - IPO) திரும்பப் பெற்றது.

நிதி முடிவுகளில் கணிசமான மாற்றங்களை இணைக்க கூடுதல் நேரம் தேவை என்பதால் ஐபிஓவை திரும்பப் பெற்றதாக அந்நிறுவனம் கூறியிருந்த நிலையில், ஐபிஓவின் வருமானத்தை வைத்து கடனைச் செலுத்துவதற்கும், எட்டு புதிய ஷோரூம்களைத் திறப்பதற்கும், பொது நிறுவன நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து 5 நாட்களில், அதாவது கடந்த பிப்ரவரி 22-ம் தேதி ஹவாலா பணப்பரிமாற்ற மோசடிப் புகாரில், கேரளாவில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை குழுமத்தின் தலைமையகம் மற்றும் திருச்சூரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் குழுமத் தலைவர் வர்கீஸின் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிகளை மீறி, இந்தியாவில் இருந்து ஹவாலா (சட்டவிரோத பணப் பரிமாற்றம்) சேனல்கள் மூலம் துபாய்க்கு அதிக அளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும், பின்னர் அந்தப் பணம் ஜாய் ஆலுக்காஸ் வர்கீஸுக்கு சொந்தமாக துபாயில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் ஜூவல்லரி எல்எல்சியில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருந்தது.

மேலும், ஹவாலா பணப் பரிமாற்றம் செய்தது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனைகளைத் தொடர்ந்து, நேற்று ஜாய் ஆலுக்காஸ் குழுமத்திற்குச் சொந்தமான ரூ. 305.84 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

அதன்படி, கேரள மாநிலம் திருச்சூர் ஷோபா நகரில் உள்ள நிலம் மற்றும் குடியிருப்பு கட்டடம் அடங்கிய ரூ.81.54 கோடி மதிப்பிலான 33 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ. 217.81 கோடி மதிப்புள்ள ஜாய் ஆலுக்காஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள், ரூ. 91.22 லட்சம் வைப்புத்தொகை கொண்ட மூன்று வங்கி கணக்குகள் மற்றும் ரூ.5.58 கோடி மதிப்புள்ள மூன்று நிரந்தர வைப்புத்தொகைகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 37A-ன் கீழ் ரூ. 305.84 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.