இந்தியா

மோடி 2.0 - மத்திய அரசின் முன் உள்ள பொருளாதார சவால்கள்

மோடி 2.0 - மத்திய அரசின் முன் உள்ள பொருளாதார சவால்கள்

webteam

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மாதம் 30ஆம் தேதி பதவியேற்றது. இந்நிலையில் மோடி தலைமையிலான இந்திய அரசின் முன் சில முக்கிய பொருளாதார சிக்கல்கள் உள்ளன. அவை குறித்து கொஞ்சம் அறிவோம். 

பொருளாதார வளர்ச்சி:

இந்திய பொருளாதார வளர்ச்சி 2018-19ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 6.6 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதே ஆண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டில் 8.2% மற்றும் 7.2% பொருளாதார வளர்ச்சி இருந்தது. அதேபோல, 2018-19ஆம் ஆண்டின் நான்காவது மற்றும் இறுதி காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8% இருக்கிறது. இதனால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் 2018-19ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8% இருந்தது எனப் புள்ளிவிவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. 

இதனால் ‘வேகமாக வளரும் பொருளாதாரம்’ என்ற நிலையை கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா முதன்முறையாக இழந்துள்ளது. எனினும் இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்படுத்தினால் அதன் பொருளாதார வளர்ச்சி 10% அடைய முடியும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் மற்றும் கீதா கோபிநாத் ஆகியோர் தெரிவித்திருந்தனர். எனவே பொருளாதாரத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் புதிய அரசு உள்ளது எனப் பொருளாதார வள்ளுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு:

இந்தியாவின் முக்கிய பிரச்னையாக உள்ளது வேலையின்மை. உலக தொழிலாளர்கள் கூட்டமைப்பின் 2018 அறிக்கையின்படி இந்தியாவிலுள்ள இளைஞர்களில் பாதி சதவிகிதம் பேர் 25 வயது நிரம்பியவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அத்துடன் இவர்களில் 19 மில்லியன் பேர் 2019ஆம் ஆண்டில் வேலையில்லாமல் இருப்பார்கள் எனக் கணித்துள்ளது. 

இதை உறுதி செய்யும் வகையில் தேசிய மாதிரி ஆய்வு புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகளும் ஒத்துப் போகின்றன. இந்தத் தரவுகளின்படி, நாட்டின் வேலைவாய்ப்பின்மை 2017-18 ஆம் ஆண்டில் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது நகர்புறங்களில் 7.8 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 5.3 சதவீதமாகவும் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதனால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆகவே வேலைவாய்ப்பு உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது. 

நிதி பற்றாக்குறை:

இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை 3.4% சதவிகிதமாக இருந்தது. ஆகவே மத்திய அரசு கூறிய வருமானம் அளிக்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் நிதி செலவினத்தை அதிகரிக்காமல் முதலீடு மூலம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முயலவேண்டும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் வகையில் திட்டங்கள் தீட்டுவதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 

வர்த்தகம்:

வர்த்தகத்துறையில் இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக பிரச்னைகள் மற்றும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறுக்குமதிக்கு தடை ஆகிய விவகாரங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அத்துடன் இந்தியாவின் வர்த்தகத்தை அதிகரிப்பது மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பை ஒழுங்குப்படுத்துவது போன்ற கடமைகள் அரசுக்கு அதிகரித்துள்ளது. மேலும் ஜி.எஸ்.டி வரியை எளிமைப்படுத்துவது மிகவும் தலையாய கடமையாக பார்க்கப்படுகிறது. உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே நிலவும் பிரச்னைகளால் ஏற்பட்ட வீழ்ச்சியின் தாக்கம் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் என்பதால் இதனையும் கூர்ந்து கவனிக்க வேண்டிய இடத்தில் மோடி அரசு உள்ளது. 

ஏற்கெனவே கடந்த நிதியாண்டில் வருமானவரி வசூலிப்பதற்கு நிர்ணயித்த இலக்கை மத்திய அரசு தவறவிட்டது. அதாவது கடந்த நிதியாண்டில் 12 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி வசூல் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு இந்த இலக்கை 82ஆயிரம் கோடி ரூபாய் அளவில் தவறவிட்டது. இதன்மூலம் அரசின் நிதி பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது. சர்வதேச நிதியம் இந்தியாவின் முக்கிய பொருளாதார பிரச்னையாக வங்கிகளிலுள்ள வாராக்கடன் மற்றும் ஜி.எஸ்.டி ஆகியவற்றை கணித்துள்ளது. 

இத்தகையை பொருளாதார சவால்களை மோடி அரசு எவ்வாறு கையாளப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதிலும் புதிதாக நிதியமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன் இந்தச் சவால்களை எதிர்கொள்ளப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.