இந்தியா

`சும்மா அதிருதுல்ல...’-கடும் நிலநடுக்கத்தை #Earthquake போட்டு ட்ரெண்டாக்கும் டெல்லிவாசிகள்

`சும்மா அதிருதுல்ல...’-கடும் நிலநடுக்கத்தை #Earthquake போட்டு ட்ரெண்டாக்கும் டெல்லிவாசிகள்

நிவேதா ஜெகராஜா

இன்று நேபாளில் 5.8 ரிக்டர் அளவில் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், டெல்லியிலும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் அது உணரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம், “மதியம் 2.28 மணி அளவில் நேபாளில் 5.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது” என்றுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதன் மையப்புள்ளியாக இருப்பது, நேபாள் தலைநகரின் காத்மண்டுவிலிருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள ஜூம்லா என சொல்லப்படுகிறது. இதன் தாக்கம், டெல்லியில் மட்டுமன்றி வடக்கு உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய இடங்களிலும் உணரப்பட்டிருக்கிறதாம். மின்விசிறிகள் மற்றும் மின்விளக்குகள் யாவும் நில நடுக்கத்தால் ஆட்டம் கண்டதால், பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. அடுக்குமாடி கட்டிடங்களில் அதிர்வலைகள் வலுவாக உணரப்பட்டதாக டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தின் மையப் பகுதி, மேற்கு நேபாளத்தில் இருந்ததால் அருகாமையில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்திலும் அதிர்வலைகள் கடுமையாக உணரப்பட்டன.

வீடு, அலுவலங்களில் இருந்தோர் பலர் நிலநடுக்கத்தை உணர்ந்து வெளியே வந்த வீடியோக்களும், மீம்ஸ்கள் ட்விட்டரில் பகிரப்பட்டு வருகின்றன. அதில் ஒருவர், “டெல்லியில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இப்போதெல்லாம் அதற்கு பழக்கமாகிவிட்டோம்” என்றுள்ளார். இன்னொருவரோ, ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வரும் `சும்மா அதிருதுல்ல...’ சீன் மீம் டெம்ப்ளேட்டை பகிர்ந்துள்ளார். இப்படி இன்னும் பலரும் பல மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.

பலரும் தங்கள் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறினாலும், எந்த இடத்திலும் நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் இதுவரை ஏற்பட்டதாக தகவல் இல்லை. நில அதிர்வு ஆபத்து மண்டலம் நான்கு மற்றும் ஐந்தின் கீழ் வரும் டெல்லி மற்றும் இமாலயத்தை சேர்ந்த அனைத்து இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக இந்த மாதம் ஐந்தாம் தேதி அன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் அதன் தாக்கம் டெல்லி வரை உணரப்பட்டது. அந்தவகையில் ஜனவரி 1ஆம் தேதி டெல்லியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ரிக்டர் அளவில் 3.8 புள்ளிகள் என்கிற அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. அதற்கு முன் சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் நேபாளத்தில் 3 நிலஅதிர்வுகள் உணரப்பட்டன. ஒன்றன் பின் ஒன்றாக, அந்த மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இப்போது இந்த வரிசையில் மற்றுமொரு நிலநடுக்கமும் இணைந்துள்ளது, அவர்களை மேலும் அச்சமடைய வைத்துள்ளது.