ஜிடிபி எக்ஸ் தளம்
இந்தியா

இந்தியாவின் மொத்த ஜிடிபி: 30% தென்மாநிலங்கள்.. சரிவைச் சந்தித்த வடமாநிலங்கள்!

2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்களிப்பை தென்மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அளித்திருப்பது அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

Prakash J

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எப்படி உள்ளது என்பது குறித்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு மத்திய அரசுக்கு அறிக்கை அளித்து வருகிறது. அதன்படி, 2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்களிப்பை தென்மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அளித்திருப்பது அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

தென் மாநிலங்களின் வளர்ச்சி!

தனிநபர் வருமானத்தை பொறுத்தமட்டில் தேசிய சராசரியை ஒப்பிடும்போது தென் மாநிலங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியிருக்கிறது என்பது புள்ளிவிவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில்

  • மகாராஷ்டிரா 13.3 சதவீதத்துடன் முதலிடத்திலும்,

  • ஆந்திரா 9.7 சதவீதத்துடன் 2-வது இடத்திலும்,

  • தமிழகம் 8.9 சதவீதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளது.

இந்தியாவின் ஜிடிபியில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் இருந்தாலும், அவர்களின் பங்களிப்பு சரிவில் உள்ளது. முன்பு 15% ஆக இருந்த ஜிடிபி, இப்போது 13.3% ஆக குறைந்துள்ளது. அதேநேரத்தில் மகாராஷ்டிராவின் தனிநபர் வருமானம் 150.7% ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க: ”பணியின் உணவு இடைவேளையில் கூட உடலுறவு கொள்ளலாம்..” - ரஷ்ய அரசு பிறப்பித்த உத்தரவின் பின்னணி என்ன?

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தென்மாநிலங்கள், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மேற்கு மாநிலங்கள் மற்ற மாநிலங்களைவிட சிறப்பாகச் செயல்படுகின்றன. வடமாநிலங்களில் சில பகுதிகளில் மட்டும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளன.

கவலை அளிக்கும் கிழக்கு மாநிலங்கள்!

அதேநேரம் மேற்கு வங்கம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் வளர்ச்சி கவலை அளிக்கும் வகையில் உள்ளது. அதாவது, 1961-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் 10.5 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த உற்பத்தி தற்போது 5.6 சதவீதமாக குறைந்திருக்கிறது.

மேற்கு வங்க மாநிலம், தனி நபர் வருமானத்திலும் சரிவைச் சந்தித்துள்ளது. முன்பு 127.5% என அங்கு இருந்த தனி நபர் வருமானம், தற்போது 83.7% ஆக குறைந்துள்ளது. இது எப்போதும் பின்தங்கிய நிலையில் இருக்கும் ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களை விட குறைவு. கடந்த சில தசாப்தங்களாகவே மேற்கு வங்கம் பொருளாதாரத்தில் தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

தனிநபர் வருமானத்தில் பிற மாநிலங்களில் என்ன நிலை?

அதுபோல், தனிநபர் வருமானத்தைப் பொறுத்தவரை டெல்லி, தெலங்கானா, கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் முன்னேறியுள்ளன. தனிநபர் வருமானம் என்பது பீகாரில் மிகக் குறைவாகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டு நிலவரப்படி, டெல்லியின் தனிநபர் வருமானம் 250.8 சதவீதமாக இருக்கிறது. இது சராசரி வருமானத்தில், நாட்டின் சராசரியை விட 2.5 மடங்கு அதிகமாகும்.

இதையும் படிக்க: NZ Vs SL | 16 ஆண்டுகளுக்குப் பிறகு 6 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டி.. என்ன காரணம் தெரியுமா?