செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கேரளாவை சேர்ந்தவர் சோயப் (35). இவர், துபாயில் சில காலம் பணியாற்றிவிட்டு, தற்போது பெங்களூரு சுத்தகுண்டே பாளையாவில் வசிக்கும் தனது சகோதரருடன் தங்கியிருக்கிறார். இந்நிலையில், கூரியர் வழியே துபாயில் இருந்து புதுடில்லிக்கும், அங்கிருந்து பெங்களூருக்கும் இ - சிகரெட் என்ற எலக்ட்ரானிக் சிகரெட்களை வரவழைத்து பதுக்கி வைத்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இது தொடர்பாக சி.சி.பி. என்ற மத்திய குற்றப்பிரிவின் போதைப்பொருள் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 3 கோடி ரூபாய் மதிப்பிலான 6,000 இ - சிகரெட்டுகளை அட்டைப்பெட்டில் அவர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், இ-சிகரெட்களையும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.