டெல்லி போலீஸ் அருகில் பரிதாபமாக நிற்கும் டூப் ஸ்பைடர்மேன் ட்விட்டர்
இந்தியா

டெல்லி: போலீஸ் வலையில் வசமாக சிக்கிய ஸ்பைடர்மேன்!

Jayashree A

நிஜ வாழ்க்கையில் பயந்தாங்கொள்ளியாக இருக்கும் ஒரு மனிதன்... மக்களுக்கு ஆபத்து என்று வந்துவிட்டால் அவருக்குள் இருக்கும் புலிமுகம் வெளிவந்துவிடும். சாரி சாரி... புலி முகமல்ல, சிலந்தி முகம்! மக்களுக்கென்றால் அவர் சிலந்தி மனிதனாக மாறி வில்லன்களை அழித்து, மக்களை காப்பாற்றுவார். அவர் கைகளை விரித்தால் போதும்... அதிலிருந்து பரவும் சிலந்தி வலை, உயரமான கட்டடத்தின் மேல்கூட அவர் ஏற உதவியாக இருக்கும்.

இப்படியான ஒரு கற்பனை கதாபாத்திரத்தில் உலாவந்த ஸ்பைடர் மேன், 90 கிட்ஸ்களின் ஹீரோ. இன்றும்கூட இவரது ஃபேன்ஸ் பட்டாளம், ஸ்பைடர்மேன் உடைகளை சந்தையில் தேடித்தேடி வாங்குகின்றனர். இன்றும் ஸ்பைடர் மேன் உடைகள் சந்தையில் சக்கைப்போடு போடுகிறதென சொல்லலாம். அந்தளவு மக்களிடம் கிரேஸ் இருக்கு! அதற்கென்ன இப்போ.... என்கின்றீர்களா? காரணம் இருக்கு.!

ஸ்பைடர்மேன்

டெல்லியை அடுத்த துவாரகாவில் (dwarka) ஸ்பைடர்மேன் உடையணிந்த ஆதித்யா என்ற 20 வயது இளைஞர், தன்னை சூப்பர் ஹீரோவாக நினைத்துக்கொண்டு, ஸ்கார்பியோ காரின் பேனட் மேல் அமர்ந்தபடி உடற்பயிற்சி செய்து துவாரகாவை சுற்றிவந்துள்ளார்.

இதை பார்த்த போலீசார் இந்த டூப் ஸ்பைடர் மேனை ஃபாலோ செய்து மடக்கிப்பிடித்துள்ளனர். தொடர்ந்து அந்த காரை ஓட்டி வந்த ஆதித்யாவின் நண்பண் கவுரவ் சிங் என்பவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் அந்த காருக்கான சான்றிதழும் அவர்களிடம் இல்லையாம். இத்துடன் ஓட்டுநர் சீட் பெல்ட் அணியவில்லை, ஆபத்தான வாகனம் ஓட்டுதல் போன்றவையும் இருந்துள்ளது. ஆகவே பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டூப் ஸ்பைடர் மேனுக்கு 26,000 ரூபாயை அபராதம் விதித்தது மட்டுமின்றி, அவர்களுக்கு அறிவுரையும் கூறி விடுவித்தனர்.

இத்துடன் டூப் ஸ்பைடர்மேனின் செயல்களை சமூக வலைதளாங்களில் டெல்லி போலீசார் வீடியோவாக ஷேர் செய்துள்ளனர். இந்த வீடியோ இப்பொழுது வைரலாகி வருகிறது.