இந்தியா

டெல்லி பல்கலைக்கழக தேர்தலில் காங். மாணவர் அமைப்பு வெற்றி: ஏபிவிபி-க்கு பின்னடைவு

rajakannan

டெல்லி பல்கலைக் கழக மாணவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் முக்கிய பொறுப்புகளை கைப்பற்றியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பான ஏபிவிபி பின்னடைவை சந்தித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்.எஸ்.யு.ஐ) தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வென்றது. செயலாளர் பதவியை மட்டும் ஏ.பி.வி.பி வென்றுள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். 

கடந்த 2012-ம் ஆண்டிற்கு பிறகு காங்கிரஸ் மாணவர் அமைப்பு தற்போது தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பெரும் பின்னடைவை சந்தித்து வந்த காங்கிரஸ் மாணவர் அமைப்பினருக்கு இந்த வெற்றி உற்சாகத்தை ஊட்டியுள்ளது. இதனிடையே, மூன்று பதவிகளுக்கான போட்டியிலும் என்.எஸ்.யு.ஐ மாணவர்களே வெற்றி பெற்றனர் என்றும், ஏபிவிபி அமைப்பின் ஒரு மாணவர் மோசடியான முறையில் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார் என்றும் காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்னர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஒட்டு மொத்த இடங்களையும் இடதுசாரி மாணவர்கள் கூட்டமைப்பு வென்றது. காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரி கட்சிகள் ஆகியவற்றின் பல்வேறு முக்கிய தலைவர்கள் டெல்லி மற்றும் ஜே.என்.யு. பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.