தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் புழுதிப் புயல் நீடிப்பதால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை முதலே டெல்லியில் பல்வேறு பகுதிகளியில் புழுதி காற்று வீசிவருகிறது. இதன் காரணமாக மக்களுக்கு பார்வைத்திறன் குறைந்துள்ளது; மேலும் இப்புழுதி, காற்றின் தரக் குறியீட்டை மோசமாக்கி உள்ளது.
இந்திய ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி டெல்லியில் இந்தியா கேட், பட்பர்கஞ்ச் மற்றும் பூசா போன்ற பகுதிகள் புழுதிப் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பூசா, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், பட்பர்கஞ்சில் உள்ள காற்றின் தரக் குறியீடு 999 ஆகவும், மந்திர் மார்க் பகுதியில் 549 ஆகவும், R K புரம் பகுதியில் 872 ஆகவும், ஆனந்த் விஹார் பகுதியில் 829 ஆகவும், ஸ்ரீ அரவிந்தோ மார்க் பகுதியில் 643 ஆகவும் காற்றின் தரக்குறியீடு மோசமான நிலை என்று அளவில் பதிவாகியுள்ளன.
ராஜஸ்தானில் நிலவும் சூறாவளி சுழற்சி காரணமாக டெல்லியில் புழுதிபுயல் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சூறாவளி சுழற்சி காரணமாக, வடக்கு ராஜஸ்தானில் புழுதிப்புயல் மற்றும் லேசான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளன. இதன் தாக்கம் ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாபின் சில பகுதிகளில் அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 75 கிமீ வேகத்தில் புழுதிப் புயல் ஏற்பட்டு, பலத்த காற்று வீசக்கூடும். மேலும் அடுத்த 2 மணி நேரத்தில் கோசாலி, மகேந்திரகர், ரேவாரி, நர்னால், பவால் ஆகிய இடங்களில் புழுதிப் புயல், இடியுடன் கூடிய மழை, மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று இயல்பை விட இரண்டு டிகிரி அதிகமாகி, வெப்பநிலை 41.3 டிகிரி செல்ஸியஸ்யாக பதிவாகி உள்ளது.