ஜிசா முகநூல்
இந்தியா

கிடைத்தது அவ்ளோ தான்! மகளின் ஒற்றை கைக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை! கண்களை கலங்கவைக்கும் சம்பவம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த தனது மகளின் கை மட்டும் கிடைத்த நிலையில், அதனை வெள்ளை துணியால் சுற்றி, தந்தை ராமசாமி இறுதி சடங்கு செய்யும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

கேரளா மாநிலத்தில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி கனமழை பெய்தது. இதனால், அட்டமலை, மேப்பாடி, சூரல் மலை பகுதிகளில் இருந்த வீடுகள், காட்டாற்று வெள்ளத்தோடு ஏற்பட்ட நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், பல வீடுகள் மண்ணோடு மண்ணாக மூடப்பட்டது...400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கி தவித்தனர்...

380க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 150 க்கும் மேற்பட்டோர் மாயமாகியும், 1000க்கும் மேற்பட்டோர் பத்திரமாகவும் மீட்கப்பட்டனர். ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினரை தவிர்த்து, பதிவு செய்யப்பட்ட ஆயிரத்து 700 தன்னார்வலர்கள், 188 குழுக்களாக பிரிந்து ஆறு இடங்களில் இந்த மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஆறாவது நாளாக தொடரும் இந்த மீட்புபணிகளில் உடல்களை தேடும் பணி நடைப்பெற்றுவருகிறது. மேலும், இதில் சிக்கி உயிரிழந்தோரின் தலை, கை, கால் உள்ளிட்ட பாகங்கள் இல்லாமலும் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், ராமசாமி என்னும் நபர் மாயமான தனது மகள் ஜிசாவை தேடி வந்தநிலையில், ஜிசாவின் கை மட்டும் கிடைத்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமசாமியின் குடும்பம்

கேராளா மாநிலம் வயநாட்டில், தனது கணவர் முருகனும் வசித்து வந்துள்ளார் ஜிசா. இவர்களுக்கு அக்‌ஷை என்ற ஒரு மகனும் உண்டு. ஜிசாவின் தந்தை ராமசாமி, தாய் தங்கம்மாள். நிலச்சரிவு ஏற்பட்ட நாளன்று பாதிக்கப்பட்டவர்களில் இவர்களின் குடும்பமும் ஒன்று.. இந்த நிலச்சரிவிலிருந்து கடும் போராட்டத்திற்கு மத்தியில் நல்வாய்ப்பாக ராமசாமி தப்பித்துக்கொள்ளவே, இவரின் மனைவி தங்கமாள்,மகள் ஜிசா, ஜிசாவின் கணவர் முருகன், சிறுவன் அக்‌ஷை என யாரை குறித்தும் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

எனவே, தனது குடும்பத்தினரை மீட்டுக்கொடுக்கும்படி மீட்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார் ராமசாமி.. இந்நிலையில், அடுத்த தினமே, இவரின் பேரன் அக்‌ஷை சடலமாக மீட்கப்பட்டு பிறகு அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால், மனமுடைந்த ராமசாமி நிச்சயம் அனைவரும் உயிருடன் வருவார்கள் என்று நம்பிக்கையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், பல நாட்கள் தேடலுக்கு பிறகு, ஒரு கை மட்டும் கிடைத்துள்ளது என்று மீட்டுப்படையினர் ராமசாமியிடம் ஒப்படைத்துள்ளனர். அதாவது, அந்த ஒற்றை கையின் விரலில் முருகன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட மோதிரம் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முருகன் ஜிசாவின் கணவரின் பெயர்..

இது தன்னுடைய மகள்தான் என அடையாளம் கண்டுகொண்ட தந்தை ராமசாமி, கையை வெள்ளை துணியால் சுற்றி மனம் வெதும்பி அழுதுள்ளார். இதன்பிறகு, ஜிசாவின் உடல் கிடைக்காத நிலையில், அந்த ஒரு கையை மட்டும் தகன மேடையில் வைத்து கண்கலங்க இறுதி சடங்கு செய்துள்ளார் ராமசாமி..மேலும், காணாமல் போன மற்றவர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

கைப்பிடித்து நடந்த குழந்தையின் கைகளை ராமசாமி இப்படி தான் காண வேண்டுமா?... இந்த சம்பவம் கேட்கும் நமக்கே மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது என்றால், தனது குழந்தையை இழந்த தகப்பனின் மனம் எவ்வளவு துடித்திருக்கும்.