இந்தியா

திருப்பதியில் இரண்டரை லட்சம் லட்டுகள் தேக்கம் - ஊழியர்களுக்கு வழங்க ஏற்பாடு

webteam

கொரோனா வைரஸ் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2.5 லட்சம் லட்டுகள் தேங்கிக்கிடக்கின்றன.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக வியாழக்கிழமை மதியம் முதல் திருப்பதி மலைப்பாதையில் மூடப்பட்டு பக்தர்கள் நேற்று மதியம் முதல் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்ட லட்டு பிரசாதம் அப்படியே நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக 2.5 லட்சம் லட்டுகள் தேக்கம் அடைந்துள்ளன.

இந்த லட்டுகளை என்ன செய்வது என்று தெரியாத நிலையில் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி தேவஸ்தான ஊழியர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்தார். அதன்படி தேவஸ்தானத்தில் நிரந்தரமாக பணிபுரியக்கூடிய ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 லட்டுகளும், ஒப்பந்த முறையில் பணி புரியக்கூடிய ஊழியர்களுக்கு தலா 5 லட்டுகள் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளனர்.

ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டாலும் சுவாமிக்கு நடைபெறக்கூடிய ஆறுகால பூஜைகள் அனைத்தும் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. இதனால் கோயிலில் வகுலமாத மடப்பள்ளியில் தினந்தோறும் சுவாமிக்கு நெய் வேத்தியம் சமர்ப்பிப்பதற்காக தேவையான பிரசாதங்கள் மட்டும் தயார் செய்யப்பட்டு கோயிலில் நித்திய பூஜைகளின்போது சமர்ப்பிக்கப் பட்டு வருகிறது.