மதுபோதையில் காரை ஓட்டிய டிரைவர் பேரிக்கேடையும், போலீஸையும் இடித்து ஏற்றும் சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பிரதான சாலை ஒன்றில் போக்குவரத்துக் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது கார் டிரைவர் ஒருவரை நிறுத்தி விசாரித்த போது, அவர் மது போதையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரிடம் ஆவணங்களை போலீஸார் கேட்க, சட்டென முன்னிருந்த ஆட்டோவை இடித்து தள்ளியவாறு காரை எடுத்தார் டிரைவர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவர் பேரிக்கேட்டை உடனே இழுத்து காரை மறிக்க முயன்றார். ஆனால் காரை நிறுத்தாத டிரைவர் பேரிக்கேட்டை இடித்துத் தள்ளி, போலீஸ் மீது காரை ஏற்றிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றார். அவரை போலீஸார் மடிக்கப் பிடித்து கைது செய்தனர்.
இந்நிலையில் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் அந்தக் காட்சி பதிவாகியிருந்தது. அக்காட்சி தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.