இந்தியா

 “என் வழியிலேயே குறுக்க வர்றீயா?” - குடிபோதையில் பாம்பைக் கடித்துக் குதறிய இளைஞர் 

 “என் வழியிலேயே குறுக்க வர்றீயா?” - குடிபோதையில் பாம்பைக் கடித்துக் குதறிய இளைஞர் 

webteam
கர்நாடக மாநிலத்தில் தனது பைக்கிற்கு குறுக்கே வந்த பாம்பை ஒருவர் கடித்துக் குதறினார்.
 
கர்நாடக மாநிலம்  கோலாரில் ஒருவர் பைக்கில் இன்று சென்று கொண்டிருந்தார். அவர் குடி போதையிலிருந்ததாகத் தெரிகிறது. அப்போது அவர் பயணித்த சாலையின் குறுக்கே ஒரு பாம்பு ஒன்று வந்துள்ளது. அதனைக் கண்ட அவர் கோபமடைந்தார். ஆகவே அவர் இறங்கி அந்தப் பாம்பைப் பிடித்து ‘எப்படி என் வழியில் குறுக்கே வருவ?” என்று கூறிக் கொண்டு அதனை எடுத்து தனது பற்களால் கடித்துக் குதறியுள்ளார். அதனை அருகிலிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாக மாறியுள்ளது. 
 
 
இந்தக் காட்சியைக் கண்டவர்கள் கூச்சலிட்டுக் கத்தியுள்ளனர். மேலும் அந்த நபர் பாம்பைப் பிடித்து, அதைத் துண்டு துண்டுகளாகப் பற்களால் கடித்ததை கண்டித்துள்ளனர். ஆனால் அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை.
 
இந்நிலையில் அந்த இளைஞர் குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சக உத்தரவைத் தொடர்ந்து திங்களன்று மது விற்பனை மீண்டும் தொடங்கிய பின்னர் நாடு முழுவதும் இதைப்போல பல அசம்பாவித சம்பவங்கள் பதிவாகியுள்ளன. விதிமுறைகளை மீறி மது பானம் வாங்குவதற்காகப் பலரும் அடிதடியில் இறங்கியுள்ளனர். அதுபோன்ற புகைப்படங்கள் பல சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.  கர்நாடகாவிலுள்ள பெங்களூரில் ஒரு நபர் 52,000 ரூபாய் மதிப்புள்ள மதுபானத்தை வாங்கினார். அதற்காக ரசீது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
 
 
ஊரடங்கிற்குப் பிறகு முதன்முறையாகக் கடைகள் திறக்கப்பட்டபோது கர்நாடக மாநிலத்தில் நேற்று மட்டும் ரூ .45 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.