இந்தியா

ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப்பொருள் சர்க்கரையாக மாறிவிடும்: அமைச்சர் கிண்டல்

ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப்பொருள் சர்க்கரையாக மாறிவிடும்: அமைச்சர் கிண்டல்

JustinDurai
நடிகர் ஷாருக்கான் பாஜகவில் இணைந்து விட்டால் போதைப்பொருள் எல்லாம் சர்க்கரையாக மாறிவிடும் எனத் தெரிவித்துள்ளார் மகராஷ்டிரா அமைச்சர் சஹாஜன் புஜ்பால்.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக்  கப்பலில் போதை விருந்தில் பங்கேற்றதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை கடந்த 3-ம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். ஆர்யன் கானின் நீதிமன்ற காவல் வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஜாமீன் கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வருகிற 26-ம் தேதி நடக்க உள்ளது. தற்போது ஆர்யன்கான் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் ஆர்யன் கானை நடிகர் ஷாருக்கான் சிறையில் சந்தித்துப் பேசினார். மகனை சிறையில் சந்தித்து விட்டு வீடு திரும்பிய நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஷாருக்கான் வீட்டுக்கு திடீரென வந்தனர். அவர்கள் சோதனையிட வந்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இது சோதனை அல்ல, வழக்கிற்கு தேவையான குறிப்பிட்ட ஆதாரத்தை சேகரித்து செல்ல வந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், ஆர்யன் கானை போதைப் பொருள் வழக்கில் சிக்க வைக்க பாஜக சதித் திட்டம் தீட்டி வருவதாகவும் அவர்களின் இலக்கு நடிகர் ஷாருக்கான்தான் எனவும் பாலிவுட் நடிகர்களை இழிவுபடுத்துவதற்காகவே இந்த சோதனை நடைபெற்றதாகவும் மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்நிலையில் மற்றொரு மகாராஷ்டிரா அமைச்சரும் ஆர்யன் கான் கைது விவாகரத்தை பாஜகவுடன் முடிச்சுப்போட்டு கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மகாராஷ்டிர அமைச்சர் சஹாஜன் புஜபால் கூறுகையில், “இந்த வழக்கு வேண்டுமென்றே புனையப்பட்டது போல் தெரிகிறது. அனேகமாக ஷாருக்கான் பாஜகவில் இணைந்து விட்டால் இந்த போதைப் பொருள் சர்க்கரையாக மாறிவிடும்” எனக் கூறி உள்ளார்.