இந்தியா

மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்-நோயாளிகளுக்கு உதவிகேட்டு சமூகவலைதளங்களில் குவியும் பதிவுகள்

மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்-நோயாளிகளுக்கு உதவிகேட்டு சமூகவலைதளங்களில் குவியும் பதிவுகள்

Veeramani

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நிரம்பி வழியும் சூழலில், நோயாளிகளுக்காக பல்வேறு உதவிகளைக் கேட்கும் பதிவுகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

பொதுமக்களின் விமர்சனத்தையடுத்து பதிவை நீக்கிய மத்திய அமைச்சர் நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள். மருந்துக்காக பல நாட்களாக இரவு பகலாக காத்திருக்கும் மக்கள். மருத்துவமனைகளின் வெளியே சிகிச்சைக்காக காத்திருக்கும் போதே உயிரிழக்கும் நோயாளிகள். கொரோனா இரண்டாவது அலையால் மனதை கலங்கடிக்கும் சம்பவங்கள் தான் இவை. கொரோனா தொற்று அதிகம் பாதிப்பை சந்தித்து வரும் மாநிலங்களில் மருத்துவ வசதி கிடைக்காமல் பலரும் தினந்தோறும் தவித்து வருகின்றனர். அத்தகைய நோயாளிகளுக்கு பெரிதும் கைகொடுத்துள்ளது சமூக வலைதளங்கள்.

நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வசதி, படுக்கை வசதிகள், ரெம்டெசிவர் மருந்து உள்ளிட்ட சிகிச்சைக்குத் தேவையான பல உதவிகளைக் கேட்டு, நோயாளிகளின் உறவினர்கள் சமூக வலைதளங்களை நாடியுள்ளனர். டிவிட்டர், வாட்ஸ் ஆப், முகநூல் என அனைத்திலும் கொரோனா நோயாளிகளுக்காக உதவிகள் கேட்டுள்ள பதிவுகளே அதிகம் காணப்படுகின்றன.

மருந்துச் சீட்டுகள், மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கும் புகைப்படங்கள், சிகிச்சைக்காக காத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு உதவிகளை கேட்டு வருகின்றனர். கொரோனா எமர்ஜென்சி, ரெம்டெசிவிர் என்ற ஹேஷ்டேக் பதிவுகளில் ஆயிரக்கணக்கான பதிவுகள் குவிகின்றன. மேலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்யக் கோரியும் வேண்டுகோள் வைக்கின்றனர்.

இத்தனை உதவிகளுக்கும் மத்தியில் மயானத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்காகவும் இடம் கேட்டு பலரும் பதிவுகளையிட்டிருப்பது நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்துள்ளது. குஜராத்தின் பல பகுதிகளில் மயானத்திற்கு வெளியே சடலத்துடன் காத்திருக்கும் உறவினர்களின் புகைப்படங்களை பதிவிட்டு உதவி கேட்டு வருவது மனதை பதைபதைக்க வைத்துள்ளது.

சமூக வலைதளங்களில் உதவிகள் கேட்பவர்களுக்கு, ஏராளமான தன்னார்வலர்களும், கட்சியினரும் உடனடியாக உதவிகளை செய்து வருகின்றனர். நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப மருத்துவ வசதிகளையும், மருந்துகளையும் தன்னார்வலர்கள் வழங்கி வருவதால், உதவிகளைக் கேட்டும் அதிகமானோர் நாளுக்கு நாள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் தன்னார்வலர்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

சாமானியர்களே இத்தனை பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள சூழலில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு மருத்துவமனையில் இடம் கேட்டு மத்திய அமைச்சர் வி.கே.சிங்கின் டிவிட்டர் பதிவு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சருக்கே இந்த நிலையா என பொதுமக்களிடையே விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்த பதிவை நீக்கிய அவர், மனிதாபிமான அடிப்படையில் தனது தொகுதியைச் சேர்ந்த நபருக்கு உதவி கேட்டதாக தெரிவித்துள்ளார்.