இந்தியா

”குழந்தைகளுக்கு கட்டுப்பாடா?; போர் வந்தால் மனிதர்களுக்கு எங்கே போவது?” : சமாஜ்வாதி எம்.பி

Veeramani

மக்கள் தொகையை கட்டுப்படுத்தினால், ஒருவேளை போர் ஏற்பட்டால் இந்தியாவுக்கு மனித சக்தி எப்படி கிடைக்கும் என்று சமாஜ்வாடி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷபிகுர் ரஹ்மான் பார்க் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

உத்தரபிரதேச சட்ட ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வரைவு மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா குறித்து ஜூலை 19ஆம் தேதிவரை பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகளை அரசு வரவேற்றுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஷபிகுர் ரஹ்மான் பார்க், “யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரைப் பொருத்தவரை அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இப்போது, முழு இந்தியாவையும் இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்காவிட்டால், நாம் வேறொரு நாட்டை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், எங்கிருந்து மனிதவளம் கிடைக்கும்? இது இழப்பை ஏற்படுத்தும் மசோதா என்பது நிரூபணமாகும்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை, உலகம் அல்லாவால் படைக்கப்பட்டுள்ளது. அவர்தான் பூமியில் உள்ள உயிர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறார். பிறக்க வேண்டிய ஒரு குழந்தை பிறக்கும். நீங்கள் சட்டத்தைத்தான் உருவாக்க முடியும், ஆனால் ஒரு குழந்தை பிறக்கும்போது அதை யார் தடுக்க முடியும்? ” என தெரிவித்தார்

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு இன்று 2021-2030ஆம் ஆண்டுக்கான உத்தரபிரதேச மக்கள் தொகை கொள்கையை வெளியிட்டார் முதல்வர் யோகி ஆதித்யநாத். இதன்படி, மாநிலத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொண்டவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் போட்டியிடவும், அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும், அரசு உதவிகளை பெறவும் தடை விதிக்கப்படும் என்று வரைவு மசோதா கூறுகிறது.