இந்தியா

புதிய தேசிய கல்வி கொள்கையில் இந்தி கட்டாயம் ?

புதிய தேசிய கல்வி கொள்கையில் இந்தி கட்டாயம் ?

webteam

மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கைக்கான வரைவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்வி கொள்கையானது 1986 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டு, 1992 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படும் என்று பாஜக வாக்குறுதி கொடுத்திருந்தது, அதன்படி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு, அமைக்கப் பட்டது.


 
அந்த குழு, தேசிய கல்வி கொள்கைக்கான வரைவை, புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் நேற்று ஒப்படைத்தது. அந்த வரைவில், தேசிய கல்வி ஆணையத்தை உருவாக்குவது, தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை தடுப்பது ஆகியவற்றுடன் இந்தி மொழி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

484 பக்க கொண்ட அந்த புதிய வரைவில், மும்மொழி கொள்கை என்பது கட்டாயம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களை, இந்தி மொழி பேசும் மாநிலங்கள், பேசாத மாநிலங்கள் என இருவகையாகப் பிரித்துள்ளனர். இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையால் இந்தி மொழியை திணிக்க முயற்சி நடப்பதாக புகார்கள் எழத் தொடங்கியுள்ளன. 

இந்த கல்வி கொள்கைக்கான வரைவு குறித்து பொதுமக்கள், ஜூன் 30 ஆம் தேதி வரை தங்கள் கருத்துக்களை nep.edu@nic.in என்ற இமெயில் முகவரியில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.