இந்தியா

'10 வருடங்களுக்கு முன்பே அவர் ஹீரோ தான்' - கேரள அனுஜித் குறித்து நெகிழும் மக்கள்!

Sinekadhara

உடல் உறுப்புகளை தானம் செய்துள்ள அனுஜித் சில தினங்களாக கேரளாவில் கொண்டாடப்பட்டு வருகிறார். ஆனால் இவர் தற்போது மட்டுமல்ல 10 வருடங்களுக்கு முன்னதாகவே கொண்டாடப்பட்டவர் என சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்

 கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனுஜித். இவர் கொட்டாரக்கராவில் ஐ.டி.ஐ.படித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சேல்ஸ்மேனாக பணிக்கு சேர்ந்திருக்கிறார். இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

அனுஜித் ஜூலை 17ஆம் தேதி பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டு, கொட்டாரக்கரா தாலுக்கா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். பின்பு நிலைமை மோசமாகவே அங்கிருந்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

அதனால் இதயம், சிறுநீரகம், சிறுகுடல் மற்றும் கைகள் உட்பட மற்ற உறுப்புகளை 8 பேருக்கு தானமாகக் கொடுக்க அவருடைய குடும்பம் முன்வந்தது. அதன்படி, கேரளாவின் உடலுறுப்பு தானம் செய்யும் நெட்வொர்க் ‘மிருதசஞ்சீவனி’ மூலம் அனுஜித்தின் இதயத்தை லிஸ்ஸி மருத்துவமனையில் சன்னி தாமஸ் என்பவருக்கும், கைகள் மற்றும் சிறுகுடல்களை அம்ருதா மருத்துவ நிறுவனத்தில் சிகிச்சை பெற்றுவரும் ஒருவருக்கும் கொடுத்துள்ளனர்.

கேரள அரசு ஒரு வாடகை ஹெலிகாப்டர் மூலம் அனுஜித்தின் பாகங்களை உரியவர்களுக்குக் கொண்டு செலுத்தியுள்ளது. ஆனால் இந்த அனுஜித் 10 வருடங்களுக்கு முன்னதாகவே கேரளாவில் அறியப்பட்டவர். அதுவும் 100க்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றிய ஹீரோவாக. 

2010ஆம் ஆண்டு அனுஜித்தும் அவருடைய நண்பர்களும் ரயில் தண்டவாளத்தில் பிளவு இருந்ததை கண்டறிந்தனர். அப்போது எதிரே ரயில் வருவதைப் பார்த்த அனுஜித்தும் அவருடைய நண்பர்களும் அனுஜித் கையிலிருந்த சிவப்புப் பையை தூக்கிக் காட்டியபடி தண்டவாளத்தில் ஓடியிருக்கின்றனர். சிவப்புப் பையை பார்த்த ஓட்டுநரும் நிலைமையைப் புரிந்துகொண்டு ரயிலை நிறுத்திவிட்டார்.  இதனால் 100க்கும் மேற்பட்ட பயணிகள் காப்பாற்றப்பட்டனர். அப்போதே இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது.