அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் இந்தியா வருகை தர இருக்கிறார். இந்த பயணத்தில் முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிப்ரவரி மாதம் 21 முதல் 24-ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை மோடி அமெரிக்கா சென்றபோது மோடியும் , ட்ரம்பும் ஒரே மேடையில் தோன்றினர். அதை போன்றதொரு பொதுநிகழ்ச்சிக்கு அகமதாபாத்தில் ஏற்பாடுகள் நடைபெறுவதாகத் தெரிகிறது. மோடியும், ட்ரம்பும் இணைந்து இதில் கலந்து கொள்வர் எனச் சொல்லப்படுகிறது.
ட்ரம்ப்பின் பயணம் தொடர்பாக ஏற்கெனவே இரு நாட்டு அதிகாரிகள் பல கட்ட ஆலோசனை நடத்தியுள்ளனர். அவர் தங்குவதற்காக டெல்லி ஐடிசி மவுரியா ஹோட்டல் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ஒபாமா, பில் கிளிண்டன் உள்ளிட்டோர் டெல்லி வருகை தந்தபோது இங்குதான் தங்கினர். சர்வதேச சபைகளில் காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட விவகாரங்களை இந்தியாவுக்கு எதிராக எழுப்ப வேண்டும் என்பதில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது. அண்மையில் டாவோஸில் நடைபெற்ற மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், அதிபர் ட்ரம்பும் சந்தித்து பேசினர். இதனை அடுத்து காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என ட்ரம்ப் மீண்டும் அறிவித்தார்.
ட்ரம்ப் விரைவில் பாகிஸ்தானுக்கு வருகை தருவார் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறி இருந்தார். எனவே இந்திய பயணத்துடனே பாகிஸ்தான் பயணத்தையும் ட்ரம்ப் திட்டமிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ட்ரம்ப்பின் இந்தியப் பயணத்தின்போது காஷ்மீர் விவகாரம், ஈரான் பிரச்னை, பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது. பாதுகாப்புத் துறை மற்றும் வர்த்தகத் துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன