இந்தியா

“புல்லட் ரயில் வேண்டாம் ; வீரர்களுக்கு புல்லட்புரூஃப் கொடுங்க” - அகிலேஷ் யாதவ்

“புல்லட் ரயில் வேண்டாம் ; வீரர்களுக்கு புல்லட்புரூஃப் கொடுங்க” - அகிலேஷ் யாதவ்

webteam

நாட்டிற்கு புல்லட் ரயில் வேண்டாம், முதலில் எல்லையிலுள்ள வீரர்களுக்கு புல்லட்புரூஃப் உடை கொடுங்கள் என மத்திய அரசை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் சாடியுள்ளார்.

உத்தரப்பிரதேசம் லக்னோவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அகிலேஷ், “இன்றைய நிலையில் நாட்டிற்கு புல்லட் ரயில் வேண்டாம். அதைவிட முக்கியமாக ராணுவ வீரர்களுக்கு புல்லட்புரூஃப் உடை தான் வேண்டும். ஆனால் மோடி தலைமையிலான அரசு புல்லட் ரயில் விடுவதையே லட்சியமாக கொண்டு செயல்படுகிறது” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “நமது உளவுத்துறை ஏன் ? தாக்குதலை தடுப்பதில் கோட்டைவிட்டனர். இறந்த வீரர்களின் உயிருக்கு எதைக்கொடுத்தாலும் ஈடாகாது. நாடே பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் சி.ஆர்.பி.எஃப் படையின் பின்னால் நிற்கிறது. அனைத்து கட்சிகளும் தங்கள் அரசியல் நிகழ்வுகளை நிறுத்திவிட்டன. ஆனால் மத்திய ஆளும் கட்சி மட்டும் எப்போதும் போல அரசியல் பணிகளை செய்துகொண்டிருக்கிறது. நாட்டின் எல்லைப் பாதுகாப்பிற்கு ஒரு நீண்ட கால தீர்வை மத்திய அரசு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

அண்மையில் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்ததை குறித்து அகிலேஷின் இந்தப் பேச்சு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.