இந்தியா

“இறந்துவிடுவோம் என தெரிந்தும் மக்கள் ஏன் மது குடிக்கிறார்கள் என புரியவில்லை”-நிதிஷ்குமார்

Veeramani

இறந்துவிடுவோம் என தெரிந்தும் மக்கள் ஏன் குடிக்கிறார்கள் என்பது புரியவில்லை என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்திருக்கிறார்.

செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்ட பீகார் மாநிலத்தின் மதுவிலக்குக் கொள்கை குறித்த மதிப்பீட்டுக் கூட்டத்திற்கு முன்னதாக நடந்த 'ஜனதா தர்பார்' நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், "மதுவை உட்கொண்டால் மக்கள் இறந்துவிடுவார்கள், இது ஒரு மோசமான பொருள். ஆனால், இது தெரிந்தும் மக்கள் ஏன் மது அருந்துகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. மாநிலத்தில் மதுவிலக்கு தொடர்பான விசயத்தை சிலர் தனக்கு எதிராகத் திரும்பியுள்ளனர்என்று கூறினார்.

மேலும்,  “ மதுவிலக்கு அனைவரின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை மறந்துவிட்டார்களா. அப்போது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, இதற்கு எந்தக் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறதா. மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்தந்த அதிகார வரம்பில் போதிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம். சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’’ என்றும் தெரிவித்தார்.

பீகாரில் கடந்த சில வாரங்களாக கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து நிதீஷ்குமாரை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டிவருகின்றன. 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எதிர்கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.