இந்தியா

”சபரிமலைக்கு பெண் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டாம்” - இந்து அமைப்புகள் கடிதம்

”சபரிமலைக்கு பெண் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டாம்” - இந்து அமைப்புகள் கடிதம்

webteam

சபரிமலை நடைதிறப்பின்போது செய்தி சேகரிக்க பெண் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டாம் என சபரிமலை இந்து அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஆகவே அப்பகுதிகளில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து ரெஹானா பாத்திமா என்ற பெண் பத்திரிகையாளரும் கவிதா என்ற மற்றொரு பெண்ணும் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர். அப்போது எதிர்ப்பு வலுக்கவே சன்னிதானம் வரை சென்று மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனிடையே இந்து அமைப்புகளின் போராட்டம் முற்றியதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதைத்தொடர்ந்து ஐப்பசி மாத பூஜை நிறைவடைந்ததையடுத்து சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மூடப்பட்டது. இந்நிலையில் மண்டல பூஜைக்காக நாளை மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. இதனால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலவுங்கல் ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் நவம்பர் 6-ஆம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விஸ்வ இந்து பரிஷத் மற்றும் இந்து ஐக்யவேதி உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளின் கூட்டு தளமான சபரிமலை கர்மா சமிதி பத்திரிகை நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், சபரிமலை நடைதிறப்பின்போது செய்தி சேகரிக்க பெண் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.  

மேலும் பெண் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க வருவது நிலைமையை மோசமாக்கும் எனவும் நிலைமையை மோசமாக்கும் நிலையை பத்திரிகை நிறுவனங்கள் உருவாக்காது என தாங்கள் நம்புவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.