இந்தியா

நாட்டின் மகள் மீது பாலியல் வன்கொடுமை அவமானம்: பிரதமர் மோடி

நாட்டின் மகள் மீது பாலியல் வன்கொடுமை அவமானம்: பிரதமர் மோடி

webteam

பாரதிய ஜனதா அரசால் தங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யமுடியும் என மக்கள் நம்புவதால் அதிகமாக எதிர்பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சுவீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் அரசு முறைப் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டிருக்கிறார். முதல் கட்டமாக ஸ்வீடன் சென்ற அவர், நார்டிக் நாடுகளின் பிரதமர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அங்கிருந்து நேற்று லண்டன் சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை சந்தித்த மோடி, இந்தியா - பிரிட்டன் நாடுகளிடையேயான இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, சிரியா மீதான தாக்குதல், தீவிரவாதம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர். 

இந்தியா பிரிட்டன் உறவுகளில் பல அம்சங்கள் குறித்து பேசியதாக பின்னர் பிரதமர் மோடி தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதைத் தொடர்ந்து பக்கிங்காம் அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத்தை மோடி சந்தித்து பேசினார். பிரிட்டன் வாழ் இந்தியர்களுடன் உரையாடிய பிரதமர், மக்கள் தமது அரசிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். தாம் விமர்சனங்களை எதிர்ப்பவர் அல்ல என கூறிய பிரதமர், தம் அரசின் மீது விமர்சனங்களுக்கு பதில் குற்றச்சாட்டுகளே முன்வைக்கப்படுவதாக கூறினார். விமர்சிப்பது ஜனநாயகத்தை வலுவுள்ளதாக்கும் என பிரதமர் கூறினார். முன்னர் அரசு ஒரு குடும்பத்தை சுற்றியே இருந்ததாகவும் ஆனால் ஜனநாயகத்தில் தேநீர் விற்பவர் கூட தங்கள் பிரதிநிதி ஆகலாம் என மக்கள் காட்டியிருப்பதாக மோடி பெருமிதம் தெரிவித்தார். கத்வா பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பேசிய பிரதமர் பாலியல் வன்கொடுமை எப்போது நடந்தாலும் அது வருத்தத்திற்குரியது என்று தெரிவித்தார். இதை அரசியலாக்க கூடாது என கூறிய அவர் நாட்டின் மகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவது நாட்டிற்கே அவமானகரமானது என தெரிவித்தார்.