இந்தியா

"பிறப்புச் சான்றிதழ் இல்லையென்றால் நான் இறந்துவிட வேண்டுமா"? - தெலங்கானா முதல்வர் காட்டம்

"பிறப்புச் சான்றிதழ் இல்லையென்றால் நான் இறந்துவிட வேண்டுமா"? - தெலங்கானா முதல்வர் காட்டம்

jagadeesh

பிறப்புச் சான்றிதழ் இல்லையென்றால் நான் இறந்துவிட வேண்டுமா என்று சிஏஏ, என்ஆர்சி சட்டங்கள் குறித்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் காட்டமாக தெரிவித்துள்ளார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் சிஏஏ, என்ஆர்சி சட்டங்கள் குறித்து மத்திய அரசை கடுமையாக சாடினார். அப்போது பேசிய அவர் "எனக்கு இப்போது வரை பிறப்புச் சான்றிதழ் இல்லை. எனக்கே இல்லாதபோது நான் எவ்வாறு என் தந்தையின் பிறப்புச் சான்றிதழை காண்பிக்க முடியும். அப்போது நான் இறந்துவிடலாமா ?" என கேள்வி எழுப்பினார்.

மேலும் தொடர்ந்த சந்திரசேகர் ராவ் "நான் பிறந்தபோது எங்களுக்கு 580 ஏக்கர் நிலமும் ஒரு வீடும் இருந்தது. நான் என் வீட்டில்தான் பிறந்தேன். என்னாலேயே பிறப்புச் சான்றிதழை சமர்பிக்க முடியாதபோது, எப்படி பட்டியலின மக்கள் தங்களது பிறப்புச் சான்றிதழ்களை சமர்ப்பிப்பார்கள். எங்கிருந்து அவர்களால் ஆவணங்களை கொண்டு வர முடியும். இதுபோன்ற சட்டத்தினால் நாடு அமைதியில்லாமல் எரிந்துக்கொண்டு இருக்கிறது. மேலும் இது ஒரு மதத்தினருக்கு எதிரானதாகவும் இருக்கிறது. எனவே இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

சந்திரசேகர் ராவின் இந்தப் பேச்சு சமூகவலைத்தளத்தில் வைரலானதும் பலர் அவருக்கு விளக்கமும் அளித்துள்ளனர் அதில் "பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் பதிவு செய்யும் சட்டம் 1969-இல் நிறைவேற்றப்பட்டு 1970-இல் அமலுக்கு வந்தது. இதில், சந்திரசேகர் ராவ் 1954-இல் பிறந்துள்ளார். ஆகையால் 1969-1970 ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்கள் அவர்களாகவே தங்களது பிறந்த தேதி, ஆண்டு, பிறந்த இடத்தை அறிவிக்கலாம். அதனால், சந்திரசேகர் ராவ் இறக்க வேண்டிய அவசியமில்லை" என தெரிவித்துள்ளனர்.