இந்தியா

பீட்சா மாவின் மீது தொங்கவிடப்பட்ட மாப்கள் - வைரல் புகைப்படங்களுக்கு டோமினோஸ் விளக்கம்!

பீட்சா மாவின் மீது தொங்கவிடப்பட்ட மாப்கள் - வைரல் புகைப்படங்களுக்கு டோமினோஸ் விளக்கம்!

ச. முத்துகிருஷ்ணன்

பெங்களூருவில் உள்ள டோமினோஸ் உணவகம் ஒன்றில் பீட்சா மாவின் மீது தரையை துடைக்கும் மாப்கள் தொங்கவிடப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சை எழுந்த நிலையில் டோமினோஸ் நிர்வாகம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

சமீபத்தில் துஷார் என்ற நபர் தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்திருந்த படம் ஒன்று சமூக வலைதளங்களில் கடும் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. பெங்களூருவில் உள்ள டோமினோஸ் உணவகம் ஒன்றில் பீட்சா மாவின் மீது தரையை துடைக்கும் மாப்கள் தொங்கவிடப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்து இருந்தார்.

“பெங்களூருவில் உள்ள ஒரு டோமினோ விற்பனை நிலையத்தின் புகைப்படங்கள் இவை. பீட்சா மாவின் தட்டுகளுக்கு மேல் தரையை சுத்தம் செய்யும் மாப்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு கழிப்பறை தூரிகை, துடைப்பான்கள் மற்றும் துணிகள் சுவரில் தொங்குவதையும் பாருங்கள். அவற்றின் கீழ் பீட்சா மாவு தட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தயவுசெய்து வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை விரும்பி சாப்பிடுங்கள்” என்று கூறி அவர் இந்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

இந்த புகைப்படங்கள் பீட்சா பிரியர்களிடையே கடும் அதிருப்தியை கிளப்பியுள்ளன. அரசு அதிகாரிகள் உணவகத்தை சோதனையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் டோமினோஸ் நிர்வாகம் இப்புகைப்படங்கள் தொடர்பாக தனது விளக்கத்தை அளித்துள்ளது.

“உயர்ந்த தரமான சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாங்கள் கடுமையான உலகத்தரம் வாய்ந்த நெறிமுறைகளை கடைபிடிக்கிறோம். இந்த இயக்க தரநிலைகளை மீறுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட்டு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்தையும் செய்ய நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்” என்று டோமினோஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது