டோலோ-650 மாத்திரை நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
கொரோனாவின் முக்கிய அறிகுறியான காய்ச்சல் பாதிப்பை குறைக்க டோலோ-650 மாத்திரை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் அதன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோ லேப்ஸ் வெளியிட்ட அறிவிப்பில், 350 கோடி டோலோ மாத்திரைகள் விற்பனையானதாகவும் ஓராண்டில் 400 கோடி வருவாய் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள பெங்களூரு உட்பட நாடு முழுவதும் 40 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மாத்திரை விநியோக நிறுவனத்திலும் இந்த சோதனை நடைபெற்றது. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.