டோலி சோஹி - அமந்தீப் சோஹி twitter
இந்தியா

சில மணி நேர இடைவெளியில்... இந்தி சின்னத்திரை சகோதரிகள் அடுத்தடுத்து மறைவு - துயரத்தில் குடும்பம்!

மார்ச் 7ம் தேதி சின்னத்திரை நடிகை அமந்தீப் சோஹி மஞ்சள்காமாலையால் உயிரிழந்த நிலையில், அவரின் சகோதரி டோலி சோஹியும் மார்ச் 8 புற்றுநோயால் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை பாலிவுட் சின்னத்திரை வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

இந்தி டிவி சீரியல்களில் 2000-ம் ஆண்டு களாஷ் (Kalash) மூலம் தன் பயணத்தை தொடங்கி, ஜனக் (Jhanak), பாபி (Babhi) உட்பட பலவற்றில் நடித்து பிரபலமானவர், நடிகை டோலி சோஹி (வயது 48). 20-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ள இவர், கடைசியாக ஜனக் என்ற சீரியலில் நடித்துவந்தார் என தெரிகிறது.

மற்றொருபுறம் கடந்த 2015-ல் ‘பெடமீஸ் டில்’ (Badtameez Dil) என்ற தொடரில்மட்டும் டோலியுடன் அவரின் சகோதரி அமந்தீப் சோஹி இணைந்து நடித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், அமந்தீப் சோஹி கடந்த சில வாரங்களாக மஞ்சள் காமாலையால் அவதிபட்டு வந்தார்.

இதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார் அவர். ஆனால் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் (மார்ச் 7) காலமானார். இருவாரங்களுக்கு முன்பு, தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இவர் போஸ்ட் போட்ட நிலையில், அது குறித்து பலரும் நலம் விசாரித்துவந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மார்ச் 7-ம் தேதி இரவு காலமானார்.

இது அவரது குடும்பத்தினரிடையேயும் நலன் விரும்பிகள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த சோகம் மறைவதற்குள், இவரின் சகோதரி டோலி சோஹி நேற்று (மார்ச் 8) காலையில் உயிரிழந்துள்ளார். இவர் புற்றுநோய் சிகிச்சையில் இருந்துவந்தவர். கிட்டத்தட்ட சில மணி நேர இடைவெளியில் சகோதரிகள் இருவருமே அடுத்தடுத்து உயிரிழந்தது, பெரும் கவலையை அப்பகுதியில் ஏற்படுத்தியிருக்கிறது.

டோலி கடந்த சில வருடங்களாகவே கர்ப்பப்பை புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை பலனின்றி நேற்று (மார்ச் 8) காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த வருட இறுதியில் டோலி தன் கீமோதெரபி சிகிச்சைக்குப்பின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதில் அவர், “எனக்காக உங்களின் அன்பையும் பிரார்த்தனையையும் அனுப்பும் அனைவருக்கும் என் நன்றி. வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ரோலர் கோஸ்டர் போல உள்ளது. ஆனால் அதை எதிர்கொள்ள நீங்கள் தைரியமாகிவிட்டால், பயணம் எளிதாகிவிடும். வாழ்வில் என்ன முடிவெடுக்க வேண்டும் என்பது எப்போதும் உங்கள் கைகளில்தான் உள்ளன. இப்படிக்கு, புற்றுநோயாளி (அல்லது) புற்றுநோயை வென்றவர்” என்று உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். இதேபோல இரு வாரங்களுக்கு முன்னர்கூட, “உங்களின் பிரார்த்தனைகள் எனக்கு வேண்டும்” என உருக்கமாக கூறியிருந்தார். அதுவே அவரின் கடைசி பதிவாகிவிட்டது என வேதனை தெரிவிக்கின்றனர் அவரின் ரசிகர்கள்.

அமந்தீப்பை மஞ்சள் காமாலைக்கு இழந்த அவரது குடும்பம், மிக தைரியசாலியான டோலியையும் ஒரேநாள் இடைவெளியில் அதுவும் சில மணி நேர இடைவெளியில் இழந்து பெரும் துயரத்தில் வாடுகிறது.