பெங்களூரை சேர்ந்த திருமணமான 36 வயதான பெண் ஒருவருக்கு அவர் கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மெக்கானிக்கான அந்தக் கணவரின் பூர்வீக சொத்தில்தான் இருவரும் தங்கள் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இத்தம்பதிக்கு இடையே அடிக்கடி தகாராறு ஏற்பட்டுள்ளது.
சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் மன அழுத்ததிற்கு தள்ளப்பட்ட அப்பெண்ணுக்கு, அடிக்கடி தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், சமீபத்தில் ஒருநாள் சண்டை அதிகமாகி அப்பெண் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அங்கிருந்து நேத்ராவதி ஆற்றுக்கு சென்று, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார் அவர்.
இரவு நேரத்தில் வீட்டிலிருந்து அப்பெண் வெளியேறியதை கண்ட அவரின் வளர்ப்பு நாய், அவர் அறியாத வகையில் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளது. ஒருகட்டத்தில் நேத்ராவதி ஆற்றை அடைந்த அப்பெண், தடுப்பு சுவரின் மீது ஏறி, ஆற்றில் குதிக்க தயாரானபோது பின்புறம் இருந்து அவரின் வளர்ப்பு நாய் அவரை பின்னோக்கி இழுத்துள்ளது. பிறகு தொடர்ந்து குரைக்க ஆரம்பித்துள்ளது.
இதனையடுத்து, சுதாரித்து கொண்டு அருகில் இருந்தவர்கள் அப்பெண்ணை பின்னுக்கு தள்ளி காப்பாற்றியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர், அப்பெண்ணை கணவனின் வீட்டிற்குத் திரும்புமாறு சமாதானப்படுத்தி உள்ளனர். இருந்தபோதிலும் அவர் மறுத்துள்ளார். தொடர்ந்து, தற்போது ஒரு நண்பரின் வீட்டில் தங்கியுள்ளார் அவர். விரைவில் அவரது தாயார் அவரை பெங்களூருக்கு அழைத்துச் செல்வார் என்று தெரிகிறது.
நாயின் இந்த துணிச்சலான செயலால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.