இந்தியா

மூணாறு நிலச்சரிவில் சிக்கிய குடும்பத்தை தேடும் நன்றியுள்ள நாய்

மூணாறு நிலச்சரிவில் சிக்கிய குடும்பத்தை தேடும் நன்றியுள்ள நாய்

webteam

மூணாறு ராஜமலை பெட்டிமுடி பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் மண்ணில் புதையுண்டவர்களை மீட்புக் குழுவினர் ஒரு புறம் தேடி வரும் நிலையில், மறுபுறம் நன்றிக்கு சாட்சியான ஐந்தறிவு கொண்ட நாய் ஒன்றும் தனது எஜமானர் குடும்பத்தை தேடி வருகிறது.

மூணாறு பெட்டிமுடி நிலச்சரிவு சம்பவத்தை நினைத்து நாடே கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது. மண்ணில் புதைந்த உறவினர்கள் கிடைத்துவிட மாட்டார்களா என ஏக்கத்தோடு அங்கு பலர் கூடியிருக்க, அவர்களோடு நன்றிக்கு சாட்சியாக நிற்கிறது ஒரு நாய். நிலச்சரிவில் சிக்கிய ஒரு குடும்பம் இந்த நாயை வளர்த்து வந்ததாகவும், நிலச்சரிவுக்கு முன் அதிபயங்கரமாக குரைத்து இந்த ஐந்தறிவு ஜீவன் எச்சரித்ததாக கூறப்படுகிறது. தூக்கத்தில் இருந்தவர்கள் சுதாரிப்பதற்குள் அந்த கொடூரம் நிகழ்ந்துவிட்டது.

மீட்புப்படையினர் சகதியிலிருந்து ஒவ்வொரு உடலாய் மீட்க,அங்கு ஓடிச்சென்று தன்னை வளர்த்த குடும்பத்தினரா என இந்த நாய் பார்ப்பதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். கவலைதோய்ந்த முகத்தோடு, கண்ணீரோடு கடந்த 5 நா‌ட்களாக மண் குவியல்களுக்கு இடையே‌ தன் குடும்பத்தை இந்த ஐந்தறிவு ஜீவன் தேடி வருகிறது.