இந்தியா

இந்தியாவிலிருந்து வெளியேறும் அளவிற்கு ட்விட்டருக்கு நெருக்கடியா?

இந்தியாவிலிருந்து வெளியேறும் அளவிற்கு ட்விட்டருக்கு நெருக்கடியா?

EllusamyKarthik

இந்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க சில ட்விட்டர் கணக்குகளை சமூக வலைத்தளமான ட்விட்டர் முடக்க தவறியதால் இந்தியாவில் மூழ்கி வரும் கப்பலின் நிலைக்கு ட்விட்டர் இந்தியா தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அரசின் உத்தரவை மீறியதால் இந்தியாவில் ட்விட்டர் முடக்கப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளதாம். கடந்த ஜூன் மாதம் சட்டப் பிரிவு 69A -வின் கீழ் இந்தியாவின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சீன நாட்டின் செயலிகள் இருப்பதாக சொல்லி, இந்தியாவில் அதற்கு தடைவிதித்தது மத்திய அரசு. இப்போது அதே நடைமுறை ட்விட்டர் விஷயத்திலும் பின்பற்றப்பட வாய்ப்புள்ளதாம். 

அமெரிக்காவின் டெக்னாலஜி சாம்ராட்டுகளான மைக்ரோசாஃப்ட், அமேசான், ஃபேஸ்புக், ஆப்பிள், கூகுள் மாதிரியான நிறுவனங்கள் இந்திய சந்தையை பிடிக்க கோடிக்கணக்கிலான முதலீடுகளை போட்டு வருகின்றன. ஆனால் ட்விட்டர் இந்தியாவில் சர்வைவலுக்காக போராடி வருகிறது. 

ட்விட்டர் நிறுவனம் இதற்கு முன்னர் வெறுக்கத்தக்க பேச்சுகளை வெளியிடும் கணக்குகளை தனது பிரைவசி பாலிசியை காரணம் காட்டி தடை செய்துள்ளது. அண்மையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கையும் முடக்கியது அந்நிறுவனம். ஆனால் இப்போது அதிலிருந்து வளைந்து கொடுத்து செல்ல வேண்டிய நிலைக்கு ட்விட்டர் இந்தியா ஆளாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதை செய்ய தவறினால் சிறை தண்டனைக்கு ஆளாகும் நிலை கூட உருவாகுமாம். குறிப்பாக இந்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் ட்விட்டரில் பரவலாக பேசப்பட்டது. அயல்நாட்டை சேர்ந்த பல பிரபலங்கள் அதுகுறித்து ட்வீட் செய்திருந்தனர். அது சர்ச்சையாகவும் வெடித்தது. இருப்பினும் இந்தியா உட்பட பல நாடுகளில் ஆட்சி, அதிகாரத்தை பிடிக்க ட்விட்டர் ஒரு பிளாட்பாரமாக செயல்பட்டு வருகிறது. அதை வைத்து பார்க்கும்போது இந்தியாவில் ட்விட்டர் தடை செய்யப்பட இப்போதைக்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. ஆனால் அரசு ட்விட்டரின் செயல்பாட்டில் சில கடிவாளங்களை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

ஒருவேளை ட்விட்டர் அதற்கு சமரசம் செய்து கொள்ளாமல் தனது கொள்கையில் உறுதியாக இருந்தால் இந்தியாவிலிருந்து ட்விட்டர் சிட்டாக பறந்து வெளியேற வேண்டி இருக்குமாம். அது நடந்தால் ட்விட்டர் மாதிரியான சமூக வலைத்தளம் ஒன்று இந்தியாவில் உருவாகலாம்.

தகவல் உறுதுனை: INC42