NCERT பாடப்புத்தகங்களில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று பயன்படுத்துமாறு கடந்த வருடம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி தற்போது பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “பாடப்புத்தகங்களில் இந்தியா, பாரத் என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதில் NCERT-க்கு எந்த கருத்து முரணும் இல்லை. தேவைப்படும் இடத்தில், இனி இரு சொற்பதங்களுமே பாடப்புத்தகங்களில் பயன்படுத்தப்படும்.
நாங்கள் எந்த விவாதத்திற்குள்ளேயும் செல்லவில்லை. வரிகளில் எங்கு பொருத்தமாக இருக்கிறதோ அங்கு பாரத் அல்லது இந்தியா என்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார். தற்போது எழுந்திருப்பது தேவையற்ற விவாதம் என்றும் அவர் கூறியுள்ளார்.
NCERT-யால் நியமிக்கப்பட்ட சமூக அறிவியலுக்கான உயர்மட்டக்குழு தலைவர் ஐசக், “பள்ளி பாடப்புத்தகங்களில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்ற சொல்லை மாற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு ஒருமனதாக பரிந்துரை செய்தது. பாரத் என்பது மிகவும் பழமையான பெயர். பாரத் என்ற பெயர் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படும் விஷ்ணு புராணத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.
ஆயினும் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை ஏற்பது பற்றியும் செயல்படுத்துவது குறித்தும் NCERT எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அதன் இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி கூறியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பாக இந்தியா என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கிய நிலையில், கடந்த ஆண்டு நடந்த ஜி20 உச்சிமாநாட்டில், பாரத் என்ற பெயர் முதன்முறையாக அதிகாரபூர்வமாக பயன்படுத்தப்பட்டது. இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக, பாரத குடியரசுத்தலைவர் என்று பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு புதுடெல்லியில் நடந்த உச்சிமாநாட்டிலும் பிரதமர் நரேந்திரமோடியின் பெயரில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்று பயன்படுத்தப்பட்டது.
முன்னதாக 12 ஆம் வகுப்பிற்கான என்.சி.இ.ஆர்.டி அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில், அயோத்தி விவகாரம் தொடர்பான பாடத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பாபர் மசூதி என்ற வார்த்தையே நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த விவகாரத்தை தொடர்ந்து தற்போது இந்தியா - பாரத் சர்ச்சை எழுந்துள்ளது.