சிரஞ்சீவி pt web
இந்தியா

சிரஞ்சீவி - அல்லு அர்ஜூன் குடும்பங்களுக்கு இடையே விரிசலா? பவனின் வெற்றியை கண்டுகொள்ளாத காரணம் என்ன?

ஆந்திராவில், துணை முதல்வர் பவன் கல்யாணின் தேர்தல் வெற்றியை, கொண்டாடிக் களித்து வருகிறது சிரஞ்சீவியின் குடும்பம். ஆனால், அவர்களின் நெருங்கிய உறவான அல்லு குடும்பத்தினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை. ஏன் என்ற பின்னணியைப் பார்க்கலாம்...

PT WEB

கொண்டாடித் தீர்க்கும் சிரஞ்சீவி குடும்பத்தினர்

திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டி, ஆந்திர அரசியலிலும் அடியெடுத்து வைத்தவர் பவன் கல்யாண். 2014 ல் தொடங்கிய ஜனசேனா கட்சி, வெற்றியை ருசிக்க பத்தாண்டுகள் ஆனது. ஜீரோ To ஹீரோ கதைதான், ஜனசேனா கட்சிக்கு. ஆனால், போட்டியிட்ட இடங்களில் எல்லாம், நூற்றுக்கு நூறு வெற்றிக்கனியைப் பறித்த, சாதனை வெற்றி.

பவன் கல்யாண்

இந்த வரலாற்று வெற்றியை குதூகலித்து கொண்டாடி வருகிறது, சிரஞ்சீவி தலைமையிலான பவன் கல்யாண் குடும்பம். வெற்றியுடன் வீடு திரும்பிய பவன் கல்யாணுக்கு ரோஜா இதழ்களை மழையாகப் பொழிந்து, வரவேற்றது 'MEGA' ஃபேமிலி.

பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்தார் தாய் அஞ்சனா தேவி. ஆரத்தி எடுத்து வரவேற்றார் அண்ணி சுரேகா. ஆள் உயர ரோஜா மாலையை அணிவித்து ஆர்ப்பரித்து வாழ்த்தினார் அண்ணன் சிரஞ்சீவி. மற்றொரு அண்ணன் நாகபாபு, மெகா ஸ்டார் குடும்ப நட்சத்திரங்களான, நடிகர்கள் ராம்சரண், வருண் தேஜ், சாய் தரம் தேஜ், நிஹாரிகா என 'MEGA' குடும்பமே, அளவற்ற உற்சாகத்தில் பவன் கல்யாணை கட்டியணைத்து வாழ்த்தியது...

சிரஞ்சீவி - அல்லு அர்ஜூன் குடும்பம்

ஆனால், சிரஞ்சீவியின் மனைவி வழி சொந்தமான, 'அல்லு' குடும்பத்தினர் யாரும், பவனின் வெற்றியை கொண்டாடவில்லை. 'MEGA' குடும்பமும் 'அல்லு' குடும்பமும் உணர்வுப்பூர்வமான சொந்தங்கள். பவன் கல்யாணின் அரசியல் வெற்றியில், அல்லு குடும்பத்துக்கு மகிழ்ச்சி இல்லையா என்ற கேள்வி எழுப்புகிறார்கள் ஆந்திர மக்கள்.

பழம்பெரும் தெலுங்கு நடிகரான அல்லு ராமலிங்கய்யாவின் மகள் சுரேகாவை மணந்தார் சிரஞ்சீவி. சுரேகாவின் சகோதரர்தான் அல்லு அரவிந்த். மைத்துனரான அல்லு அரவிந்தை, தனது திரையுலக தளபதியாக வைத்திருந்தார் சிரஞ்சீவி. 1974 ல் கீதா ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, சிரஞ்சீவியின் பல படங்களை தயாரித்தவர் அல்லு அரவிந்த்.

தமிழில் ரஜினிகாந்த் நடித்த மாப்பிள்ளை, விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய், ஆகியவையும் அல்லு அரவிந்த்தின் தயாரிப்புகள்தான்... இவருடைய 3 மகன்களில் அல்லு அர்ஜூன், அல்லு சிரிஷ் ஆகியோர், சினிமா ஸ்டார்களாகினர். இவர்களில் அல்லு அர்ஜூன், இப்போது PAN INDIA STAR. பெரிய ஸ்டாராக இருந்தாலும், தனது அத்தை மகன் ராம்சரண் நாயகனாக நடித்த 'எவடு' திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார் அல்லு அர்ஜூன். இந்த அளவுக்கு நெருக்கமான மெகா - அல்லு குடும்பத்தினரிடையே விரிசல் ஏற்பட காரணம்... அரசியல்...

குடும்பத்தில் விரிசலா?

தேர்தலின்போது, தனது சித்தப்பா பவன் கல்யாணுக்காக பரப்புரை களத்தில் இறங்கினார் ராம் சரண். ஜனசேனா வேட்பாளர்களுக்காக ஓடியாடி வாக்கு சேகரித்தார். அதே நேரத்தில், எதிர்முகாமான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நந்தியாலா தொகுதி வேட்பாளர் ஷில்பா ரவி ரெட்டியை, அவரது வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்தினார் அல்லு அர்ஜூன். அவரைக் காண அலைமோதியது ரசிகர் கூட்டம். இது சிரஞ்சீவி குடும்பத்தினரை அதிருப்தியடைய வைத்தது.

அல்லு அர்ஜூன்,

இதுபற்றி பின்னர் விளக்கமளித்த அல்லு அர்ஜூன், தனது நண்பர் என்ற வகையில் மட்டுமே ஷில்பா ரவி ரெட்டியை சந்தித்ததாகவும், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

போட்டியாளருடன் கரம் கோர்ப்பவரை நமது குடும்பமாக கருத முடியதென சிரஞ்சீவியின் சகோதரரும் ஜனசேனா கட்சி பொதுச் செயலாளருமான நாகபாபு, எக்ஸ் வலைத்தள பக்கம் மூலமாக சீறினார். சிரஞ்சீவியின் தங்கை மகனான நடிகர் சாய் தரம் தேஜ், அல்லு அர்ஜூனை சமூக வலைத்தளப் பக்கத்தில் Unfollow செய்துவிட்டார். பிரம்மாண்டமாக நடந்த பதவியேற்பு விழாவில் அல்லு குடும்பத்தினர் யாருமே பங்கேற்கவில்லை... இவற்றையெல்லாம் மெகா மற்றும் அல்லு குடும்பத்தின் இடையில் ஏற்பட்ட விரிசலாகவே பார்க்கிறார்கள் ஆந்திர மக்கள்.