ராகுல் காந்தி - அரவிந்த் கெஜ்ரிவால் - மோடி புதிய தலைமுறை
இந்தியா

தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு மாற்றாக நினைக்கிறதா ஆம் ஆத்மி? விரிவான அலசல்...

கணபதி சுப்ரமணியம்

டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து, அதன்மூலம் மாநிலங்களவையில் 10 உறுப்பினர்களை ஆம் ஆத்மி பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஹரியானா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களின் பக்கம் ஆம் ஆத்மியின் கவனம் திரும்பியுள்ளது. இந்த மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆம்ஆத்மி கட்சி

இதற்கு அடுத்தபடியாக, மும்பை, பெங்களூரு ஆகிய மாநகரங்கள் மூலம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காலூன்றும் முயற்சிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், வரும்காலத்தில் தோழமை கட்சியாக உள்ள காங்கிரஸுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆம் ஆத்மி நேரடியாக மோதும் சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு ஒரு சான்றாக, குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்ததற்கு ஆம் ஆத்மி பிரித்த வாக்குகளே காரணம் என கருதப்படுகிறது. அப்போது, குஜராத் மாநிலத்தில் தாங்களே பிரதான கட்சியாக உருவெடுத்துள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்திருந்தனர். தற்போதுகூட டெல்லியில் மட்டும்தான் காங்கிரஸுடன் கூட்டணி எனவும், பஞ்சாப் மாநிலத்தில் தனித்துதான் போட்டியிடுவதாகவும் ஆம் ஆத்மி கட்சியினர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் மற்றும் டெல்லியில் அசைக்கமுடியாத சக்தியாக உள்ள தங்கள் கட்சி விரைவில் இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் வலுவாக திகழும் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

2014 மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். அப்போதே பிரதமர் வேட்பாளர் என்ற பெரிய குறிக்கோளுடன் அரவிந்த் கெஜ்ரிவால் களமிறங்கியது, ஆம் ஆத்மி கட்சியின் வருங்கால கனவுகளை கோடிட்டு காட்டும் விதமாக இருந்தது.

அரவிந்த் கெஜ்ரிவால்

அமலாக்கத்துறை வழக்கு மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடி போன்ற சிக்கல்கள் விலகிய பிறகு, தனது கனவுகளை நினைவாக்க ஆம் ஆத்மி கட்சி அகில இந்திய அளவில் காங்கிரஸுக்கு மாற்றாக உருவெடுக்க முயற்சி செய்யும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.