இந்தியா

பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்ப முயன்ற மாணவர்கள் மீது கல்வீசி தாக்குதல் - ஜே.என்.யுவில் பரபரப்பு

பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்ப முயன்ற மாணவர்கள் மீது கல்வீசி தாக்குதல் - ஜே.என்.யுவில் பரபரப்பு

webteam

பிரதமர் மோடிக்கு எதிராக பிபிசி தயாரித்திருந்த ஆவணப் படத்தை ஒளிபரப்ப முயன்ற டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் மீது கல்வீசி தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அம்மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து நாட்டு ஊடகமான பிபிசி கடந்த 17ஆம் தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. 'India: The Modi Question' என்ற தலைப்பிலான அந்த ஆவண படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் பிபிசி ஆவண படத்துக்கான லிங்குகளும், படம் தொடர்பான கருத்துகளும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.

இதையடுத்து, பிபிசியின் இந்த ஆவணப் படத்தை யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட மத்திய அரசு கடந்த 18ஆம் தேதி தடை விதித்தது. மத்திய அரசு தடை விதித்திருக்கும் நிலையிலும் சமூக வலைத்தளங்களில் பிபிசி ஆவணப்படம் தொடர்பான கருத்துகள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகின்றன. அத்துடன் பிபிசி ஆவணப் படத்துக்கான இணைப்பும் பதிவிடப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இப்படத்திற்கு கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், மத்திய அரசு தடை செய்த பிபிசி ஆவணப்படத்தைத் திரையிட முடிவு செய்திருக்கின்றனர். அப்போது கல்லூரி நிர்வாகம் மின்சாரத்தைத் துண்டித்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும், மாணவர்கள் தடையை மீறி ஆவணப்படங்களை செல்போன் மூலம் ஒளிபரப்பி இருக்கின்றனர். அப்போது இருட்டிலிருந்து சிலர் திட்டமிட்டு கற்கலால் தாக்கியுள்ளனர். இதையடுத்து, மாணவர்கள் பேரணியாகச் சென்று வசந்த் கஞ்சிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு பதற்றமான நிலை உருவானதால் ஜே.என்.யூ. வளாகத்துக்கு எதிரே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.