இந்தியா

தலையில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு.. நினைவு இழந்தவரை பக்குவமாக காப்பாற்றிய மருத்துவர்கள்

தலையில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு.. நினைவு இழந்தவரை பக்குவமாக காப்பாற்றிய மருத்துவர்கள்

Sinekadhara

டெல்லியின் சோனியா விஹார் பகுதியில் வசித்து வருபவர் ராதே ஷ்யாம் (வயது 39). இவர் மார்க்கெட்டிற்கு சென்றபோது அடையாளம் தெரியாத ஒரு நபரால் சரமாரியாக சுடப்பட்டார். இதனால் சம்பவ இடத்திலேயே சுய நினைவிழந்து பேசமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். முதலில் லோக் நாயக் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக் கொடுக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து சிர் கங்கா மருத்துவமனைக்கு ஜூலை 4ஆம் தேதி மாற்றப்பட்டார்.

அங்கு சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருடைய தலையில் மண்டை ஓட்டிற்கு உள்ளே வெளியே என பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டினால் பலத்த காயங்களும், துப்பாக்கி குண்டின் துகள்களும் இருப்பதை கண்டுபிடித்தனர். குறிப்பாக தலையின் முக்கிய பகுதியான ஹெமிஸ்பெயர் பகுதியில் அடிபட்டிருந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு உடனே ஆபரேஷன் செய்யப்பட்டது. தலையின் மேலே இருந்த எலும்பு மடலை அகற்றியபோது, துப்பாக்கிக் குண்டு சிதறி நூற்றுக்கணக்கான துகள்களாக படிந்திருந்தது. பல துகள்கள் மண்டை ஓட்டை ஆழமாக ஊடுருவி, மூளையின் இடது பகுதியை மிகவும் பாதித்திருந்தது தெரியவந்தது.

கடுமையான அழுத்தம் ஏற்பட்டதால் அந்த பகுதி வீக்கமடைய தொடங்கியது. மேலும் இதனால் உருவான பல ரத்தக் கட்டிகளையும் அகற்றவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதிக நேர அறுவை சிகிச்சையால் ரத்தப் போக்கும் அதிகரித்தது. அனைத்து சிரமங்களையும் தாண்டி மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். வெண்டிலேட்டரிலிருந்து படிப்படியாக குணமான நோயாளி கடந்த திங்கள்கிழமையன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இதுபற்றி சிகிச்சை அளித்த டாக்டர் கல்ரா கூறுகையில், ‘’இந்த அறுவை சிகிச்சைக்கு தயாராவதற்கு, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கு போதிய நேரம் இல்லை. பல சவால்களுக்கு மத்தியில் எங்கள் மருத்துவ குழு சிறப்பாக செயல்பட்டு கடினமான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளது'' என கூறினார்.