இந்தியா

மூன்றரை மணிநேரத்தில் 50 கிலோ கருப்பைக் கட்டியை அகற்றிய டெல்லி மருத்துவர்கள்

மூன்றரை மணிநேரத்தில் 50 கிலோ கருப்பைக் கட்டியை அகற்றிய டெல்லி மருத்துவர்கள்

Sinekadhara

டெல்லி இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர்கள் 52 வயது பெண்ணின் வயிற்றிலிருந்து 50 கிலோ எடையுள்ள ஒரு பெரிய கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சைக்கு பல அணுகுமுறைகளை மருத்துவர்கள் பின்பற்றியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக உடல் எடை அதிகரித்து, மொத்தம் 106 கிலோ எடையுடன் இருந்த ஒரு பெண்ணுக்கு, சமீபத்தில் சுவாசக்கோளாறு, அடிவயிற்றில் கடுமையான வலி மற்றும் அதன் விளைவாக நடப்பதில், தூங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனையில் சோதித்துப் பார்த்ததில், அந்தப் பெண்ணின் கருப்பையில் கட்டி ஒன்று படிப்படியாக வளர்ந்து வருவது கண்டறியப்பட்டது. இது அவரது குடலுக்கு அழுத்தம் கொடுத்ததால் கடுமையான வயிற்றுவலி, ஜீரணக்கோளாறு மற்றும் பல பிரச்னைளுடன் ஹீமோகுளோபின் அளவும் குறைந்து, கடுமையான ரத்தசோகையும் ஏற்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையின் இரைப்பை, குடல் மற்றும் பேரியாட்ரிக் அறுவைசிகிச்சை மூத்த ஆலோசகர் டாக்டர் அருண் பிரசாத் தலைமையிலான குழு, ஆகஸ்ட் 18அன்று 50 கிலோ கட்டியை எடுப்பதற்காக மூன்றரை மணிநேரம் அறுவைசிகிச்சையை நடத்தியது.

இதுபற்றி டாக்டர் அருண் பிரசாத், ஒரு நபரின் உடல் எடையில் ஏறக்குறைய பாதி எடைகொண்ட கட்டியை ஒருபோதும் பார்த்ததில்லை. 2017ஆம் ஆண்டு ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து 34 கிலோ கட்டி அகற்றப்பட்டது.

இப்போது 50 கிலோ கட்டியை பிரித்தெடுப்பது எங்கள் குழுவுக்கு மிகவும் சவாலாக இருந்தது. மேலும் அந்த பெண்ணுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்ததால் அறுவைசிகிச்சைக்கு முன்னும், அதற்கு பின்னும் 6 யூனிட் ரத்தம் செலுத்த வேண்டியிருந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் லேபரோஸ்கோபி அல்லது ரோபோ உபகரணங்களை பயன்படுத்த அடிவயிற்றில் போதிய இடமில்லை. எனவே பாரம்பரிய அறுவைசிகிச்சை முறைகளைத்தான் கையாளவேண்டி இருந்தது. காஸ்டோ எண்டாலஜி, மகப்பேறு மற்றும் அனெஸ்திஸியாலஜி ஆகிய குழுக்களைச் சேர்ந்த நிபுணர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால்தான் இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்று கூறியுள்ளார்.

உடனடி அறுவைசிகிச்சை அவருக்கு வலியுறுத்தப்பட்டது. இல்லாவிட்டால் கட்டி வளர்ந்து மற்ற உறுப்புகளை செயலிழக்க வைத்திருக்கும். அதிர்ஷ்டவசமாக அந்த கட்டியால் எந்த தீங்கும் இல்லை, மேலும் நோயாளிக்கு உடலில் எந்த பிரச்னையும் இல்லாததால் இது விரைவில் சாத்தியமாயிற்று. ஆபரேஷனுக்குப் பிறகு அவரது எடை 56 கிலோவாக குறைந்துவிட்டது என டாக்டர் திவாரி கூறினார்.

இந்த பெரிய சவாலான கட்டியால் முதலில் குடல் முழுவதும் சுருங்கி தட்டையானது. இது குடலில் அழுத்தம் கொடுத்து கருப்பை சிதைவு ஏற்படும் அபாயத்தை உருவாக்கியது. ஒரே நேரத்தில் கருப்பை அல்லது குடலுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை என்பதை உறுதிசெய்து மிகவும் துல்லியமாக இதை நடத்தி நோயாளியை மீட்டதாக மகப்பேறு அறுவைசிகிச்சை நிபுணர் கீதா சதா கூறியுள்ளார்.