இந்தியா

’கூகுள் சந்தேகங்களுக்கு ரூ.1000’ : நெட்டிசன்களின் வரவேற்பை பெற்ற மருத்துவரின் OPD கட்டணம்!

’கூகுள் சந்தேகங்களுக்கு ரூ.1000’ : நெட்டிசன்களின் வரவேற்பை பெற்ற மருத்துவரின் OPD கட்டணம்!

JananiGovindhan

தும்மல், சளி, இருமல், தொண்டை எரிச்சல் போன்ற சாதாரண தொந்தரவு வந்தாலே பெரும்பாலான மக்கள் உடனடியாக நாடுவது மருத்துவமனையையோ அல்லது குடும்ப மருத்துவர்களையோ அல்ல. கூகுள் என்னும் எம்.பி.பி.எஸ் தான்.

அதில் தேடுபொறியில் என்ன தொந்தரவு இருக்கிறதோ அது குறித்து தேடினால் போதும் மளமளவென ஆயிரத்தெட்டு தீர்க்கவே முடியாத நோய்களாக இருக்கக் கூடும் எனச் சொல்லி கிலியை கூட்டும்.

அவற்றையெல்லாம் பார்த்து வெறும் சளி, காய்ச்சல் மட்டுமே இருந்தவரை மனநோயாளியாக்கி பித்து பிடிக்கச் செய்துவிடுகிறது. இதுபோக, இன்டெர்நெட்டில் கொட்டிக்கிடக்கும் பற்பல வைத்தியங்களை சுயமாக மேற்கொண்டு அதனால் பல பக்கவிளைவுகளையும் பெற்று கடைசியாக அருகாமையில் இருக்கும் கிளினிக்கில் உள்ள மருத்துவரை அணுகி நூறுகளில் செலவாவதை ஆயிரங்களில் செலவிடுவதையே பலரும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற செயல்களால் நோயாளிகள் மட்டுமல்லாது நோயை குணப்படுத்தும் மருத்துவர்களும் சமயங்களில் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது.

இப்படி இருக்கையில், ட்விட்டரில் கவுரவ் டால்மியா என்ற பயனர் ஒருவர் பகிர்ந்த மருத்துவர் ஒருவரின் புறநோயாளிகளுக்கான சிகிச்சை கட்டணம் குறித்த பதிவு வைரலாகியிருக்கிறது.

அதில், “மருத்துவரின் பரிசோதனை, சிகிச்சை என்றால் ரூ.200, மருத்துவரின் சோதனை, நோயாளியின் சிகிச்சை என்றால் ரூ.500, நோயாளியின் கூகுள் சந்தேகங்களுக்கு ரூ.1000, நோயாளியின் கூகுள் சோதனை, மருத்துவரின் சிகிச்சைக்கு ரூ.1500, நோயாளியே நோயை கண்டறிந்து, சிகிச்சையும் பெற்றால் ரூ.2000” என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட போஸ்டரைதான் அந்த ட்விட்டர்வாசி பகிர்ந்து “இந்த முறையை மருத்துவர் முற்றிலுமாக புரிந்துக் கொண்டிருக்கிறார்” எனவும் பதிவிட்டார்.

இந்த பதிவுதான் சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருவதோடு, அதனை பகிர்ந்த பலரும் “இது மிகவும் சரியானது, நியாமான கட்டணம்” என பதிவிட்டு வருகிறார்கள்.