இந்தியா

நோயாளிக்கு தலையணையானது துண்டிக்கப்பட்ட கால்: உ.பி. மருத்துவமனையில் அவலம்

நோயாளிக்கு தலையணையானது துண்டிக்கப்பட்ட கால்: உ.பி. மருத்துவமனையில் அவலம்

rajakannan

உத்தரப்பிரதேச மருத்துவமனையில் சாலை விபத்தில் துண்டிக்கப்பட்ட நோயாளியின் காலையே, அவருக்கு தலையணையாக மருத்துவமனை பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

உத்தரப்பிரதேசம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த அவலம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் இதுதொடர்பான வீடியோ வெளியானதை அடுத்து இந்த அவலம் வெளியே தெரிய வந்துள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரது தலைக்கு தலையணையாகத் துண்டிக்கப்பட்ட ரத்தக் கறையுடன் கூடிய கால் தலையணையாக வைக்கப்பட்டுள்ளது. 

கால் துண்டிக்கப்பட்ட அந்த இளைஞர், தனியார் பள்ளி வாகனத்தின் ஓட்டுநராக பணிபுரிகிறார். அவர் குழந்தைகளுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த டிராக்டருடன் மோதி விபத்து ஏற்படாமல் இருப்பதை தடுக்க முயற்சித்த போது தலைகீழாக வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அவரது காலில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த இளைஞரின் காலை மருத்துவர்கள் சிகிச்சை செய்து துண்டித்தனர்.  

இந்த நிலையில்தான், தலையணைக்கு பதிலாகத் துண்டிக்கப்பட்ட காலை வைத்திருப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

ஏற்கனவே, ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாத காரணத்தால் பிஞ்சுக் குழந்தைகள் 70க்கும் மேற்பட்டோர் உத்தரப்பிரதேசத்தில் உயிரிழந்த சம்பவம் கடந்த ஆண்டு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், இந்த சம்பவமானது மீண்டும் உத்தரப்பிரதேச மருத்துவ சேவையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 

இருப்பினும், துண்டிக்கப்பட்ட கால் தலையணையாகப் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும், இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது. நோயாளிகளின் அறைக்குள் துண்டிக்கப்பட்ட கால் எப்படி வந்தது என்பது இன்னும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.