இந்தியா

கைதட்டியதெல்லாம் ஒருநாள் கூத்தா.. நம்மை காக்கும் மருத்துவர்களுக்கு இப்படியொரு அவலமா?

கைதட்டியதெல்லாம் ஒருநாள் கூத்தா.. நம்மை காக்கும் மருத்துவர்களுக்கு இப்படியொரு அவலமா?

jagadeesh

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்களை அவர்கள் குடியிருக்கும் வீட்டை காலி செய்யுமாறு கூறுவது கண்டிக்கத்தக்க செயல் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. தற்போது வரை 3,34,000 பேருக்கும் மேற்பட்டோர் உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகளவில் 17,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் அச்சம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், உலக அளவில் 67 நாட்களில் ஒரு லட்சம் பேருக்குப் பரவிய கொரோனா வைரஸ் அடுத்த 11 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேருக்குப் பரவியுள்ளது. அதன் பின்னர் அடுத்த 4 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேருக்குப் பரவி 3 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை 500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போதைய நிலவரப்படி 446 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 22 பேர் புதிதாகச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதன் தொடர்ச்சியாக இன்று மாலை 6 மணியிலிருந்து 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு நடைபெற்றது. அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்கும் மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக மாலை 5 மணிக்குப் பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி பலரும் தங்கள் வீட்டுக்கு வெளியே நின்று கைகளைத் தட்டி உற்சாகப்படுத்தினர். ஆனால், மருத்துவர்களுக்காக கைதட்டியது எல்லாம் சும்மா ஒருநாள் கூத்துபோல ஆகிவிட்டது. அப்படியான கவலை அளிக்கும் சம்பவங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆம் உண்மைதான், அதனை வேதனையுடன் பகிர்ந்துள்ளார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்.

இது குறித்து ஹர்ஷவர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "டெல்லி, நொய்டா, வாராங்கல், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் டாக்டர்கள் மற்றும் மருத்துவத்துறையில் பணி புரிபவர்கள்கள் குடியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர்கள் வற்புறுத்துவதாகச் செய்திகள் வருகிறது. அவர்களால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடும் என அவர்கள் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய செய்திகள் மிகவும் மன வருத்தத்தைத் தருகிறது. கொரோனாவால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. மருத்துவர்களும் பணியாளர்களும் அத்தனை விதமான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துதான் சிகிச்சைப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் தன்னலமற்ற சேவையை நாம் பாராட்ட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.