இந்தியா

”என்னால் ஒரு நிலையில் இருக்கமுடியவில்லை”- கொரோனாவில் இருந்து மீண்ட மருத்துவரின் சோக முடிவு

webteam

பீகாரில் கொரோனா தடுப்பூசி பிரிவின் பொறுப்பாளராக இருந்த அரசு மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலைப்பளு காரணமாக  அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்ஸ்வரூப் சவுத்தரி. ஜமுய் மாவட்டம் கிதார் நகரத்தில் உள்ள அரசு மருத்துவமணையில் மருத்துவராக பணிபுரிந்தார். மேலும் அவர் மாவட்ட கொரோனா தடுப்பூசி பிரிவில் பொருப்பாளராகவும் பணியாற்றினார். இந்நிலையில், நேற்று காலை இவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது வீட்டில் இருந்து அவர் எழுதிய கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதில், வேலை அழுத்தம் மற்றும் சுகாதார பிரச்சினைகள் அவரை இந்த தற்கொலை முடிவை தள்ளியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிறகு என் மனம் ஒருநிலையில் இல்லை(mental imbalance). நினைவாற்றல் மற்றும் தூக்கம் இழப்பு ஆகியவற்றை உணர்கிறேன். இதன் காரணமாக, என்னால் சரியாக வேலை செய்ய முடியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது உறவினர்களும், நண்பர்களும் கூறுகையில், நிர்வாகம் அவருக்கு அதிகமான வேலைப்பளுவை கொடுத்ததாக குற்றம் சாட்டுகின்றனர்.