அரசு மருத்துவமனையில் Wedding Photoshoot Puthiya thalaimurai
இந்தியா

ஆபரேஷன் தியேட்டரில் PreWedding Photoshoot நடத்திய மருத்துவர்; ஆட்சியர் கொடுத்த அதிரடி ட்ரீட்மெண்ட்!

கர்நாடகாவில் அரசு மருத்துவமனையில் திருமண போட்டோஷூட் நடத்திய மருத்துவரை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

விமல் ராஜ்

திருமணத்திற்கு முன்பும் பின்பும் போட்டோஷுட் செய்வது தற்போது பிரபலமாகி வருகிறது. இது தனிநபரையோ பொதுமக்களையோ தொந்தரவு செய்யாத வரையில் சரிதான். ஆனால் ஆபத்தான முறையில் கடற்கரை ஓரம் புகைப்படம் எடுப்பது, மலைகளின் உச்சியில் புகைப்படம் எடுப்பது, ஓடும் காரில் இருந்து இறங்கிக்கொண்டே புகைப்படம் எடுப்பது, அரசு பேருந்தில் புகைப்படம் எடுப்பது என பொது இடங்களில், அதுவும் அசம்பாவிதம் ஏற்படும் இடங்களில் செய்வதென்பது ஆபத்து. இந்தப் போக்கு சமீபத்தில் வாடிக்கையாக மாறி விட்டது. அப்படித்தான் ஆந்திர மாநிலத்தில் அரசு பேருந்தில் ஒரு தம்பதி வெட்டிங் போட்டோஷூட் நடத்திய சம்பவம் சமீபத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

அது ஓய்வதற்குள் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் சற்று வித்தியாசமாக யோசிப்பதாக நினைத்து, திருமணத்திற்கு முந்தைய தனது போட்டோஷுட்டை சர்ஜரி வார்டில் எடுத்து சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார்.

கர்நாடக மாநிலம், சித்ரதுர் அருகே உள்ள பரமசாகரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் அபிஷேக் என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

இதற்காக இவர் திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷுட் எடுக்க ஆசைப்பட்டுள்ளார். இதற்காக தனது வருங்கால மனைவியை, தான் வேலை செய்யும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, மருத்துவமனையில் இருந்த பெட்டில் ஒருவரைப் படுக்க வைத்து, அவருக்கு அபிஷேக் அறுவை சிகிச்சை செய்வது போலவும், அபிஷேக்கிற்கு, வருங்கால மனைவி மருத்துவ உபகரணங்கள் எடுத்துக் கொடுத்து, உதவி செய்வது போலவும், 'போட்டோ ஷுட்' எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிஸைன்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். மேலும் ‘மருத்துவ தொழிலைக் கொச்சைப்படுத்துகிறார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இச்சம்பம் குறித்துக் கேள்விப்பட்ட சித்ரதுர்கா மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், மருத்துவர் அபிஷேக்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.