இந்தியா

அருகில் உள்ள வீட்டிற்கே செல்லாமல் 6 மாதங்கள் கொரோனா பணியாற்றிய மருத்துவர்.!

அருகில் உள்ள வீட்டிற்கே செல்லாமல் 6 மாதங்கள் கொரோனா பணியாற்றிய மருத்துவர்.!

webteam

டெல்லியில் கொரோனா பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் 6 மாதங்களுக்கு பிறகு தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.

கொரோனா பாதிப்பு கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நிலவி வருகிறது. ஊரடங்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என பரபரப்பாக இருந்தது. மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள் என முன்கள வீரர்கள் பலர் இரவுபகல் பாராமல் சேவையாற்றினர். குறிப்பாக மருத்துவர்களின் பணி அளப்பரியது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பணியில் இருந்த மருத்துவர் அஜித் ஜெய்ன் என்பவர் 6 மாதங்களுக்கு பிறகு தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவர் பணியாற்றும் மருத்துவமனைக்கும், அவரது வீட்டிற்கும் 13கிமீ தூரம் தான். கிட்டத்தட்ட 30 நிமிடம் பயணம் தான். ஆனால் தொடர் வேலை மற்றும் வீட்டில் உள்ளவர்களின் பாதுகாப்பு கருதி அவர் சொந்த வீட்டிற்கு கடந்த 6 மாதங்களாக செல்லவில்லை. மார்ச் 17ம் தேதிக்கு பிறகு 175 நாட்கள் கழித்து மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார் மருத்துவர் அஜித் ஜெய்ன். அவரைக் கண்டதும் அவரது இரண்டு மகள்களும் கட்டி அணைத்து அன்பை பரிமாறிக்கொண்டனர். மருத்துவரை அவரது மனைவி ஆரத்தி எடுத்து வரவேற்றார்.

இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர், என்னுடைய பெற்றோருக்கு 75வயதுக்கு மேல் ஆகிறது. அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டேன். மேலும் மருத்துவமனையிலும் அதிக பணி இருந்தது. போன் பேசக்கூட நேரம் இருக்காது. உயிர்களை காப்பாற்றுவதே முதல் பணி. நான் இரவு 1 மணிக்கு தான் வீட்டில் உள்ளவர்களுடன் போனில் பேசுவேன் என தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் தங்கிக்கொள்ள டெல்லி அரசு தனி இடங்களை ஒதுக்கிக் கொடுத்தாலும் வேலைப்பளு காரணமாக பல இரவுகள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டி இருந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்