இந்தியா

இதுதான் தாய்ப்பாசம்... கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் 6 மாத குழந்தையை பாதுகாத்த டாக்டர்

இதுதான் தாய்ப்பாசம்... கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் 6 மாத குழந்தையை பாதுகாத்த டாக்டர்

Veeramani

கொரோனா தொற்றுக்குள்ளாகி பெற்றோர்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஆறுமாத குழந்தை எல்வினை ஒரு மாதகாலம் தனது பராமரிப்பில் வைத்திருந்து பாதுகாத்துள்ளார் கேரள மருத்துவர் மேரி அனிதா.இவரின் இந்த செயல் மனிதாபிமானத்துக்கு எடுத்துக்காட்டாய் பெரும் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது. ஒருமாத கவனிப்பிற்கு பிறகு நேற்று பெற்றோர்களிடம் குழந்தையை ஒப்படைத்தார் மருத்துவர் மேரி.

கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்தவர்கள் எல்டோஸ் மற்றும் ஷீனா தம்பதிகள். இவர்களுக்கு இரண்டு வயதில் மகனும், ஆறுமாத குழந்தையாக எல்வினும் உள்ளனர். கூர்கானில் பணியாற்றும் எல்டோஸ் மற்றும் அங்கிருந்து திரும்பிய அவரது மனைவி ஷீனாவுக்கும் கொரோனா தொற்று உறுதியான காரணத்தால், அவர்கள் கொச்சினில் தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்துக் கொண்டனர். இந்த தம்பதிகளின் இரண்டு வயது மகனை அவனது பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில், ஆறுமாத குழந்தையை பாதுகாப்புடன் பராமரிப்பதற்கு அனைவரும் தயங்கினார்கள். அந்த சூழலில்தான் மருத்துவர் மேனி அனிதா, துணிச்சலுடன் இக்குழந்தையை வாங்கிக் கொண்டார். முதலில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்து தன்னுடனே தனி அறையில் வைத்துக்கொண்டார். பிறகு எல்வினுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்த பிறகு தனது சொந்த வீட்டுக்கே கொண்டு சென்றார். அங்கு மேரி அனிதாவும், அவரின் மூன்று குழந்தைகளும் சேர்ந்து எல்வினை பாசத்துடன் பார்த்துக் கொண்டனர்.

பெற்றோரை பிரிந்த குழந்தை எல்வின்,  ஒருமாத கால தனிமைப்படுத்தலுக்கு பிறகு மீண்டும் ஜூலை 15 ஆம் தேதி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். ஒரு மாத காலம் பாசத்துடன் பராமரித்த குழந்தையை பிரிய முடியாமல் மேரி அனிதாவும் அவர்களின் மூன்று குழந்தைகளும் கண்ணீர் உதிர்த்த காட்சி அனைவரையும் நெகிழ செய்தது. குழந்தை எல்வினும் மேரி அனிதாவை விட்டு பெற்றோரிடம் சென்றபோது நீண்டநேரம் அழுதபடியே இருந்துள்ளான். கொரோனாவால் பாதிக்கப்பட்ட தங்களின் குழந்தையை தைரியத்துடன் ஒரு மாதகாலம் பராமரித்த மருத்துவர் அனிதாவுக்கு பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி கூறினர். இந்த மருத்துவரின் செயலுக்கு நாடு முழுவதில் இருந்து பாராட்டுகள் குவிந்துவருகிறது.