ஜம்மு-காஷ்மீர் முகநூல்
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்... மருத்துவர் உட்பட 7 பேர் மரணம்!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் மருத்துவர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

PT WEB

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் மருத்துவரொருவர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள குந்த் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அண்டை மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த முகாமை குறிவைத்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் அங்கிருந்த மருத்துவர் மற்றும் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி முழுவதும் பாதுகாப்புப் படை வீரர்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துக்கு ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட யாரும் தப்ப முடியாது என்றும், அவர்களுக்கு உரிய பதிலடி அளிக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

அமித் ஷா

இதற்கிடையே, பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புப் படை வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.