இந்தியா

சிங்கம் கர்ஜித்து பார்த்து இருப்போம்; குறட்டை விட்டு பார்த்திருக்கீங்களா ?

சிங்கம் கர்ஜித்து பார்த்து இருப்போம்; குறட்டை விட்டு பார்த்திருக்கீங்களா ?

jagadeesh
காட்டின் ராஜா  என்றால் அது சிங்கம்தான். ஆஜானுபாகுவான உடல் அமைப்பு தலையைச் சுற்றி இருக்கும் பிடரி, அதன் கம்பீர நடை மற்றும் பயமுறுத்தும் அதன் கர்ஜனை- இதுதான் சிங்கத்தின் அடையாளம். "சிங்கம் சிங்கிளாதான் வரும்" என்று ரஜினிகாந்தும் தன் படத்தின் மூலம் சிங்கம் குறித்துச் சிலாகித்து வசனம் பேசியிருக்கிறார்.
இதையெல்லாம் தாண்டி நகர் சூர்யாவே சிங்கம் என்ற தலைப்பில் தொடர்ந்து மூன்று பாகங்களில் படமும் நடித்துவிட்டார். இவையெல்லாம் பெரியவர்களுக்கு. சிறுவர்களையும் சிங்கம் வேறு விதமாக மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. ஹாலிவுட் படங்களான "நார்நியா"வில் அஸ்லான் என்ற சிங்கமும், "தி லயன் கிங்" படத்தில் வரும் சிம்பா என்ற கதாபாத்திரமும் காலத்தால் அழிக்க முடியாதது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல "ஆண்" சிங்கங்கள் வீட்டிலிருந்தபடியே அலுவலகப் பணியையும் வீட்டு வேலையும் செய்து வருகின்றனர். சரி, அப்போது நிஜ சிங்கங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்றால் அவையெல்லாம் உயிரியல் பூங்காவில் நிம்மதியாக குறட்டை விட்டுத் தூங்கி வருகின்றன. சிங்கம் கர்ஜிக்கத்தானே செய்யும் குறட்டை விடுமா என்று கேட்டால் அதற்கு நடிகர் வடிவேலு பாணியில் "அது போன மாசம்" என்றுதான் கூறவேண்டும்.

ஊரடங்கு காரணமாக நாட்டின் பல்வேறு உயிரியல் பூங்காவுக்குக் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளுக்கு மட்டும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. எப்போதும் மனிதர்களைக் கூட்டம் கூட்டமாகப் பார்த்துப் பழகிய விலங்குகளுக்கு இப்போது மிகவும் போர் அடிக்கிறது என்றே கூற வேண்டும். எனவே இப்போது செய்வதறியாது ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கின்றன. இப்படிதான் ஒரு சிங்கம் நன்றாக குறட்டை விட்டபடி தூங்கிக்கொண்டு இருக்கிறது.

அப்படியொரு வீடியோவை வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் " ராஜா தூங்கும்போது விடும் குறட்டை அது கர்ஜிப்பதைக்காட்டிலும் சத்தமாக இருக்கும். பொதுவாக ஒரு ஆண் சிங்கம் காட்டில் நாள் ஒன்றுக்கு 18 முதல் 20 மணி நேரம் வரை தூங்கும். இது உயிரியல்ல பூங்காவில் குறைவுதான். பெண் சிங்கங்கள் தனது குட்டிகளைப் பராமரிக்க வேண்டும் என்பதால் 12 மணி நேரம் மட்டுமே தூங்கும். ஆனால் இங்கே இந்த ராஜா ஒரு நீண்ட கனவில் இருக்கிறார்" என விவரித்துள்ளார்..

சுசாந்தா நந்தாவின் இந்தப் பதிவைப் பார்த்த பலர் "பிரமாதம் சிங்கத்தின் குறட்டை ஒரு ஜீப்பை ஸ்டார்ட் செய்வது போல இருக்கிறது" எனக் கருத்து பலர் தெரிவித்து வருகின்றனர்.