முகேஷ் அம்பானி குடும்ப திருமணம் முகநூல்
இந்தியா

பில்கேட்ஸ் To ஜான் சீனா..குவிந்த பிரபலங்கள்! திருமணத்திற்கு முகேஷ் அம்பானி வாரி இறைத்த ரூ.5000 கோடி!

சராசரி இந்திய குடும்பம் திருமணத்திற்காக செலவழிப்பதை விட, முகேஷ் அம்பானி தனது மகன் திருமணத்திற்காக செலவழித்த தொகை மிகவும் சொற்பமானது என்றால் நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கும்.ஆனால் உண்மை அது தான்.

PT WEB

செய்தியாளர்: தினேஷ்குமார்

சராசரி இந்திய குடும்பம் திருமணத்திற்காக செலவழிப்பதை விட, முகேஷ் அம்பானி தனது மகன் திருமணத்திற்காக செலவழித்த தொகை மிகவும் சொற்பமானது என்றால் நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கும்.ஆனால் உண்மை அது தான்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற சொல் வழக்கு இருக்கிறது.. திருமணத்திற்கான ஏற்பாடுகளே சொர்க்கம் போல இருந்தால், நட்சத்திரங்களின் திரளாக இருந்தால், அப்படி ஒரு திருமணம் தான் இந்தியாவில் நடந்திருக்கிறது. அதுவும் நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில், ஊகித்தபடி, ரிலையன்ஸ் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் திருமணம் தான் அது.

திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள், திருமண கொண்டாட்டங்கள், திருமணத்துக்கு பிந்தைய கொண்டாட்டங்கள் என இதுவரை யாருமே செய்யாத அளவுக்கு தடல்புடலாக நடந்து வருகிறது ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் திருமணம். வரும் 14 ஆம் தேதி திருமண வரவேற்புடன் முடியும் இந்த கொண்டாட்டங்களில் இதுவரை மைக்ரோசாஃப்ட் நிறுவனரான பில்கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க், பிரபல பாப் பாடகர் ரிஹானா, பாலிவுட் திரைநட்சத்திரங்கள், கிரிக்கெட் ஜாம்பவான்கள் என உலகின் மிக முக்கியமான விஐபிக்கள் பங்கேற்று இருக்கிறார்கள்.

அதிலும் ஒருநாள் மட்டும் இசைக் கச்சேரி நடத்திய ரிஹானாவுக்கு 70 கோடி ரூபாய் வரை அம்பானி பணத்தை வாரி இறைத்ததாக சமூகவலைத் தளங்களில் வெளியான தகவல்கள், இந்திய மக்களை வாய் பிளக்க வைத்தது.

தற்போது அடுத்த பிரம்மாண்டமாக திருமணத்திற்கு முந்தைய இரவு அன்று பாட வந்த பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபருக்கு 84 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிற தகவலும் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. இதற்கே இவ்வளவு செலவு என்றால், ஒட்டுமொத்த திருமணத்திற்கு அம்பானி வாரி இறைத்தது எவ்வளவு தெரியுமா? ஒரு சராசரி இந்திய குடும்பத் தலைவர் வாரிசுகளின் திருமணத்திற்காக தனது மொத்த வருவாயில் இருந்து 10 முதல் 15 விழுக்காடு வரை செலவு செய்வார் என்கிறது இந்திய புள்ளி விவரங்கள்.

அப்படி இருக்கும்போது, ஆசியாவிலேயே நம்பர் ஒன் பணக்காரரான அம்பானி நிச்சயம் அதை விட அதிகமாகவே செலவழித்திருப்பார் என்பதே பலரது ஊகம். ஆனால், அதில் துளியும் உண்மையில்லை என்கிறார் நிதி ஆலோசகராக சேவையாற்றி வரும் நிதின் சவுத்ரி.

மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், “50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கும் ஒரு குடும்பம், வாரிசுகளின் திருமணத்திற்காக 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை செலவழிக்க தயங்குவதில்லை என்கிறார்.

அதே போல 10 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் ஒரு குடும்பம், சில லட்சங்களிலோ அல்லது கோடியிலோ செலவிட்டு திருமணத்தை நடத்தி முடிக்கும் என்பதும் வாடிக்கையானது தான். ஆனால், இதை விழுக்காடு வாரியாக பார்த்தால், சராசரியாக ஒரு இந்திய குடும்பம் திருமணத்திற்காக செலவழிப்பதை விட, சொற்ப அளவிலேயே அம்பானி செலவழித்திருக்கிறார்.

அதாவது ஃபோர்ப்ஸ் இதழின் கூற்றுப்படி 10 லட்சத்து 28 ஆயிரத்து 544 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் முகேஷ் அம்பானி, இந்த திருமணத்திற்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்திருப்பதாக வைத்தாலும், அது அவரது மொத்த வருவாயில் பூஜ்யம் புள்ளி ஐந்து விழுக்காடு தான்.” அதாவது திருமணத்திற்காக சராசரி இந்திய குடும்பம் செலவழிக்கும் 15 விழுக்காட்டை விட, அம்பானி வெகு சொற்பமாகவே செலவழித்திருப்பதாக கூறி இருக்கிறார் நிதின் செளத்ரி.