இந்தியா

சபரிமலை ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை எத்தனை லட்சம் தெரியுமா? வெளியான தகவல்

சபரிமலை ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை எத்தனை லட்சம் தெரியுமா? வெளியான தகவல்

webteam

சபரிமலையில் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 16ம் தேதி முதல்  தற்போது வரை பக்தர்களின் கூட்டம் அங்கு தொடர்ந்து அலை மோதி வருகிறது. குறிப்பாக சனிக்கிழமையான நேற்று (26.11.22) மட்டும் தரிசனத்திற்காக வெர்ச்சுவல்யூ மூலம் 86,814 பேர் முன்பதிவு செய்து இருந்தனர். அவர்களில் நேற்று 78,148 பேர் தரிசனம் செய்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று (27.11.22) 63,130 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் இன்று காலை 11 மணி வரை 31,895 பேர் தரிசனம் செய்துள்ளனர். இது வெர்ச்சுவல் கியூ மூலம் முன்பதிவு செய்த பக்தர்களின் வருகையை மட்டுமே குறிப்பிடுகிறது. இவர்கள் மட்டுமன்றி, ஸ்பாட் புக்கிக் செய்து வருவோர் மற்றும் நீலிமலை, அப்பாச்சிமேடு, சரங்கொத்தி, மரக்கூட்டம், சத்திரம், புல்லுமேடு ஆகிய வனப்பாதைகளில் வருவோரின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், இன்று இரவிற்குள் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலையில் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட கடந்த 16ம் தேதி முதல் தற்போது வரையில் அங்கு தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை கடந்துள்ளது. "வெர்ச்சுவல் க்யூ" மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் ஐந்து லட்சம் கடந்த நிலையில் இதர வழிகளையும் சேர்த்தால் அதுவும்  இரண்டு லட்சம் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 9 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களின் 80 சதவீதத்தினர் தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாக தேவசம்போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை அதிகரிப்பால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள்  கேரள அரசு துறைகள் மற்றும் தேவசம்போடு சார்பில் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கத்தின் இரண்டு ஆண்டுகள், கட்டுப்பாடுகளுடனான தரிசனம் ஓராண்டு என மூன்று ஆண்டுகளுக்குப் பின், இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் முழுத் தளர்வுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவே  தினசரி பக்தர்களின் வருகையை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.