"என்னிடம் நேருக்கு நேர் மோத உனக்கு துணிச்சல் இருக்கிறதா?" என்று ரவுடி ஒருவருக்கு ராஜஸ்தான் எம்எல்ஏ சவால் விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் டோல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜகன் குஜ்ஜார். அப்பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வரும் இவர் மீது கொலை, ஆள் கடத்தல், பணம் பறித்தல் என 120-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் டோல்பூர் பகுதியில் இருக்கும் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டியிருக்கிறார் ஜகன் குஜ்ஜார். இதில் சில வியாபாரிகளுக்கும், ஜகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜகன் குஜ்ஜார், தனது கைத்துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி சுட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸாரிடம் வியாபாரிகள் புகார் அளித்தனர். ஆனால், அரசியல் செல்வாக்கு அதிகம் இருக்கும் ஜகன் குஜ்ஜார் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் தயங்கியுள்ளனர்.
இந்த தகவலை கேள்விப்பட்ட அத்தொகுதி எம்எல்ஏவான கிரிராஜ் சிங் மலிங்கா, ரவுடி ஜகன் குஜ்ஜாரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். இதனால் அவரை தேடும் பணியை போலீஸார் முடுக்கி விட்டனர். இதையடுத்து, எம்எல்ஏ கிரிராஜ் சிங் மலிங்காவை மிரட்டும் வகையில் மூன்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை ரவுடி ஜகன் குஜ்ஜார் வெளியிட்டார். அதில் ஒரு வீடியோவில், "எம்எல்ஏ கிரிராஜ் சிங்குக்கு தைரியம் இருந்தால், போலீஸ் பாதுகாப்பு இன்றி என்னை சந்திக்க வரட்டும். அவ்வாறு சந்தித்தால் என்ன நடக்கும் என்பது அவருக்கு தெரியும்" என அவர் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, எம்எல்ஏவுக்கு மிரட்டல் விடுத்ததாக ஜகன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சூழலில், ரவுடி ஜகனுக்கு பதிலளிக்கும் விதமாக எம்எல்ஏ கிரிராஜ் சிங் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், "நான் எந்த போலீஸ் பாதுகாப்பும் இல்லாமல்தான் இருக்கிறேன். என்னிடம் நேருக்கு நேர் மோதுவதற்கு உனக்கு துணிச்சல் இருக்கிறதா?" எனக் கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜ் சிங், "ஜகன் குஜ்ஜாரின் மிரட்டலுக்கும், அவரது துப்பாக்கிக்கும் நான் பயப்பட மாட்டேன். என்னிடம் இருப்பது டம்மி துப்பாக்கி அல்ல" எனவும் அவர் கூறினார். ரவுடியும், எம்எல்ஏவும் ஒருவரையொருவர் மிரட்டும் தொனியில் வீடியோ வெளியிட்டு வருவது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.