வேறு விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசு குழப்பம் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், அடுத்தக் கட்ட போராட்டத்தை நோக்கி விவசாயிகள் நகர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடாத வேறு விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி குழப்பம் விளைவிப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கடிதம் மூலம் வலியுறுத்தினர். மேலும் வேளாண் சட்டங்களுக்கு சில விவசாய அமைப்புகள் ஆதரவு தருவதாக ஊடகங்களில் பேட்டி அளிப்பதையும் மத்திய அரசு நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
வேளாண் சட்டத்தை எதிர்ப்பவர்கள், ஆதரவு தருபவர்கள் என அனைத்து தரப்பினரையும் ஒன்றுகூட்டி பேச்சுவார்த்தை நடத்துமாறும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். வேளாண் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது உள்பட மத்திய அரசு முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் நிராகரிப்பதாகவும் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.